Courtesy: Joseph Nayan
மன்னார் மாவட்டத்தின் கட்டுக்கரை குளத்தின் கீழ் சிறுபோகச் சாகுபடி நிலங்களைப் பகிர்ந்தளிப்பதில் நிகழ்ந்துள்ள பாரிய முறைகேடுகள் தொடர்பில் பொது மக்கள் மற்றும் விவசாயிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இந்த முறைப்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு, இன்று (15.05.2026) மன்னார் மாவட்டச் செயலகத்தில் விசேட கூட்டம் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கடந்த பல வருடங்களாக இந்த ஈவு வழங்குகின்ற விடயத்திலே சிறுபோக விவசாயிகள் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு கொண்டிருப்பதாக முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்று இருக்கிறது.
கல்வி அபிவிருத்தி நிதியம்
இந்த வருடம் 32 ஏக்கர் விவசாய பூமி ஏலம் விடப்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட 35 இலட்சத்திற்கும் மேற்பட்ட தொகைக்கு ஏலம் விடப்பட்டிருக்கிறது.

இந்தத் தொகை கடந்த காலங்களில் குறிப்பிட்ட சில அமைப்புக்களால் தங்களுடைய
தேவைகளுக்காக , நிர்வாக தேவைகளுக்காகவும் ஏனைய தேவைகளுக்காகவும் செலவிடப்பட்டதாக அவர்களால் கூறப்பட்டுள்ளது.
அது மட்டுமல்லாமல் கல்வி அபிவிருத்தி நிதியத்திற்கு
மாணவர்களுடைய குறைபாடுகளைத் தீர்ப்பதற்காக செலவிடப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இருப்பினும் பல்வேறுபட்ட குளறுபடிகள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ள போதிலும் ஈவு வழங்குவதிலும் பாரபட்சங்கள் சில இடங்களில் இடம்பெற்று வருகின்றன.
கட்டுக்கரை திட்ட மேலாண்மை குழு
இதற்கு வருகின்ற வருடம் மாவட்ட அபிவிருத்தி குழு மற்றும் ஏனைய சம்பந்தமான
திணைக்களங்கள் முழுமையாக ஒன்றுகூடி, ஒரு பொருத்தமான, ஏழை விவசாயிகளை
பாதிக்காத வகையில் ஒரு காத்திரமான திட்ட வரைவு ஒன்றை மேற்கொள்ளவுள்ளது.

மேலும், கட்டுக்கரை திட்ட மேலாண்மை குழுவை மாற்றி அமைக்க குறித்த
கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. அதை மாற்றியமைப்பது தொடர்பாகவும் விவசாய
அமைச்சருடன் கலந்துரையாடி முழுமையாக மாற்றியமைக்கப்பட வேண்டும்
தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எந்த ஒரு குழுவாக இருந்தாலும் இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை மாற்றியமைக்கப்பட
வேண்டும். ஆனால் இந்த குறிப்பிட்ட குழு கடந்த ஐந்து வருடங்களாக இருப்பதாகத்
தெரிய வந்துள்ளது.
இந்த விடயங்களை எதிர்வரும் வருடங்களிலே முழுமையாக சீர் செய்வதற்கு
தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு இங்கு கையாளப்பட்ட நிதிகளுக்கான சரியான கணக்கறிக்கைகள் போன்றவற்றை சமர்ப்பிப்பதற்கு உரிய தரப்பினரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பிரத்யேக மேலாண்மைக் குழு
இதன் போது கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க,
“ 2026 ஆம் ஆண்டு பருவ காலத்திற்கு யோத வாவியின் கீழ்
விவசாயிகளுக்கு வயல் நிலங்களை வழங்குவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் குறித்து
விரிவாக ஆராயப்பட்டது.

மன்னார் மாவட்டத்திற்கு மட்டுமேயான பிரத்யேக மேலாண்மைக் குழு ஒன்று கடந்த
சில ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது.
ஏனைய மாவட்டங்களில் இவ்வாறான குழுக்கள் இல்லை.
இந்தக் குழுவின் செயற்பாடுகளில் சில முறைகேடுகள் நடப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த 5-6 ஆண்டுகளாக இக்குழுவின் ஊடாகச் சிறு போகச் சாகுபடிக்காக நிலங்கள்
ஒதுக்கப்பட்ட போது, சில அதிகாரிகள் தனிப்பட்ட தேவைகளுக்காகவும்
வருமானத்திற்காகவும் பெருமளவிலான வயல் நிலங்கள் (சுமார் 25-30 ஏக்கர் வரை)
அதிக விலைக்கு விற்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
ஒரு விவசாயிக்கு 13 ஏக்கர் நிலம் வழங்கப்பட வேண்டும் என்ற விதிமுறை இருந்தும்,
நடைமுறையில் 1, 2 அல்லது 3 ஏக்கர் மட்டுமே பயிரிடும் சிறு விவசாயிகளுக்கு
சிறுபோகத்தில் தொடர்ச்சியாக நிலம் மறுக்கப்பட்டு வந்துள்ளது.
இந்த முறைகேடுகளை தவிர்க்கும் பொருட்டு, 2026 ஆம் அடுத்த ஆண்டு முதல், விவசாய
அமைச்சின் நேரடி வழிகாட்டலின் கீழ் புதிய முறைமை அறிமுகப்படுத்தப்படும்.
நெல் கொள்முதல்
கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் இக்குழுவில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து
முறையான விசாரணை ஒன்றை நடத்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் சம்மதம்
தெரிவித்துள்ளனர்.

2026 சிறுபோக நெல் கொள்முதலுக்காகத் திறை சேரியினால் பெருமளவு நிதி
ஒதுக்கப்பட்டிருந்தது. தற்போது நாட்டில் போதியளவு நெல் கையிருப்பில் உள்ளது.
மன்னார் மாவட்டத்தில் நிலவிய வறட்சியான காலநிலை காரணமாக விவசாயிகள் மீண்டும்
பயிர்ச் செய்கையில் ஈடுபட்டுள்ளனர்.
அத்துடன் தற்போது அறுவடை சந்தைக்கு வரத்
தொடங்கியுள்ளது.
திறை சேரியினால் ஒதுக்கப்பட்ட நிதி தற்போது முடிவடைந்துள்ளது. மன்னார் மாவட்ட
விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்ய மேலதிகமாக 100 மில்லியன் ரூபாய்
நிதியை வழங்குமாறு நிதியமைச்சிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அரசாங்கம் தலையிட்டு விவசாயிகளின் அறுவடைக்கு நியாயமான விலையை பெற்றுத் தருவதை
உறுதி செய்யத் தேவையான அரசியல் ரீதியான அழுத்தங்களை வழங்க நாங்கள் நடவடிக்கை
எடுப்போம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த
கூட்டத்தில் , மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரும், பிரதி
அமைச்சருமான உபாலி சமரசிங்க நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம்
அடைக்கலநாதன்,எஸ்.ஜெகதீஸ்வரன் பிரதேச செயலாளர்கள்,உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள்,
கட்டுக்கரை குள விவசாய அமைப்புகள், திட்ட மேலாண்மை குழு போன்ற பிரதேச
அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

