Last Updated:
நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததற்கு முழு பொறுப்பை ஏற்றுக் கொள்வதாக மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
வினாத்தாள் கசிவு காரணமாக, ரத்து செய்யப்பட்ட நீட் தேர்வு, அடுத்த மாதம் 21-ஆம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. மேலும் அடுத்த ஆண்டு முதல் நீட் ஆன்லைன் மூலம் நடைபெறும் என்றும் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு, நாடு முழுவதும் கடந்த 3-ஆம் தேதி நடத்தப்பட்டது. இதனை சுமார் 22 லட்சம் மாணவர்கள் எழுதிய நிலையில், தேர்வுக்கு முன்பே ராஜஸ்தானில் வினாத்தாள் கசிந்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட தேசிய தேர்வு முகமை, நாடு முழுவதும் நடைபெற்ற நீட் தேர்வை ரத்து செய்வதாக அறிவித்தது.
இந்நிலையில், நீட் மறுதேர்வு அடுத்த மாதம் 21ஆம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. இதற்கு மாணவர்கள் தனியாக விண்ணப்பிக்கவோ, கட்டணம் செலுத்தவோ தேவையில்லை என்று தேர்வு முகமை விளக்கம் அளித்துள்ளது. கடந்த 3ஆம் தேதி நடைபெற்ற தேர்வு ரத்தாகி, சுமார் ஒன்றரை மாதங்களுக்குப் பிறகு மறுதேர்வு நடைபெற உள்ள நிலையில், நடப்பாண்டிற்கான மருத்துவ மாணவர் சேர்க்கை மிகவும் தாமதமாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், பொறியியல், வேளாண்மை , கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கையும் தாமதமாகும் என அஞ்சப்படுகிறது.
இந்நிலையில், நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததற்கு முழு பொறுப்பை ஏற்றுக் கொள்வதாக மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் ஒரு குற்றவாளி கூட தப்பிக்க முடியாது என்று கூறினார்.
தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமையில் சீர்திருத்தம் மேற்கொள்ள வேண்டி இருப்பதாகவும் தர்மேந்திர பிரதான் குறிப்பிட்டார். ஜூன் 21-ஆம் தேதி நடைபெற உள்ள நீட் மறுதேர்வுக்கான ஹால் டிக்கெட் ஜூன் 14-ஆம் தேதி வெளியாகும் என்றும் மத்திய அமைச்சர் அறிவித்தார். மேலும் நீட் தேர்வு அடுத்த ஆண்டு முதல் ஆன்லைன் மூலம் நடைபெறும் என்றும் OMR முறையைவிட கணினி வழித்தேர்வு முறை ஒப்பீட்டளவில் சிறந்தது என்றும் மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.


