கோலாலம்பூர்:
கிள்ளான், ஜாலான் காப்பார் பகுதியில் இன்று அதிகாலை நிகழ்ந்த கோரமான சாலை விபத்தில், முப்பது வயது மதிக்கத்தக்க பாதசாரி ஒருவர் அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கிள்ளானில் இருந்து காப்பார் நோக்கிச் சென்ற கருப்பு நிற எஸ்யுவி (SUV) ரக வாகனம் ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்திலிருந்த பாதசாரி மீது மோதியதில், அவர் அருகில் இருந்த இரண்டு மீட்டர் ஆழமுள்ள வாய்க்காலில் தூக்கி வீசப்பட்டார்.
அதிகாலை 3.30 மணியளவில் தீயணைப்பு, மீட்புத் இலாகாவினரின் உதவியுடன் மீட்கப்பட்ட அந்த ஆடவர், பலத்த வயிற்றுக் காயம் காரணமாக உயிரிழந்ததைச் சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியது.
விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநர் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடியுள்ள நிலையில், இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த பொதுமக்கள் உடனடியாக வட கிள்ளான் மாவட்டக் காவல்துறை தலைமையகத்தைத் தொடர்பு கொள்ளுமாறு மாவட்டப் போலீஸ் தலைவர் ஏசிபி எஸ். விஜய ராவ் கேட்டுக்கொண்டுள்ளார்.




