Last Updated:
தமிழக முதல்வராகத் தேர்வான விஜய்க்கு மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (X) தளத்தில் நெகிழ்ச்சியான வாழ்த்துச் செய்தியைப் பகிர்ந்துள்ளார்.
மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிம், தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அவர்களுக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்துகளுக்கு விஜய் நன்றியும் தெரிவித்துள்ளார்.
“திரைப்படப் புரட்சி நிஜமானது”
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று, தமிழகத்தின் அடுத்த முதலமைச்சராகப் பொறுப்பேற்கவுள்ள விஜய்க்கு உலகத் தலைவர்கள் பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (X) தளத்தில் நெகிழ்ச்சியான வாழ்த்துச் செய்தியைப் பகிர்ந்துள்ளார்.
அதில் அவர், “திரையில் மூன்று மணி நேரத்திற்குள் ஊழல்வாதிகளையும், வில்லன்களையும் வீழ்த்தும் நாயகனாக விஜய்யை அவரது ரசிகர்கள் கண்டு ரசித்தனர். ஆனால், தற்போது அதைவிடப் பெரிய பொறுப்பை (முதலமைச்சர் பதவி) தமிழக மக்கள் அவரிடம் ஒப்படைத்துள்ளனர்” என்றுள்ளார்.
மலேசிய பிரதமர்
மேலும் விஜய்யின் ‘சர்க்கார்’ திரைப்படப் பாடலான “ஒரு விரல் புரட்சி” என்ற வரிகளைக் குறிப்பிட்டு, அந்தப் புரட்சி இப்போது நிஜமாகி வரலாறு படைக்கக் காத்திருக்கிறது என்று பாராட்டியுள்ளார். இத்துடன் மலேசியாவுக்கும் தமிழ்நாட்டிற்கும் இடையே பல தலைமுறைகளாகத் தொடரும் ஆழமான வரலாற்று மற்றும் கலாச்சார உறவுகளை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தனது பதிவில் அவர், “எனது நண்பர் விஜய் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். வரும் காலங்களில் அவருடன் இணைந்து பணியாற்றுவதை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள முதலமைச்சர், “மலேசியாவின் மாண்புமிகு பிரதமர் அன்வாரி இப்ராஹிம் அவர்கள் வழங்கிய அன்பான வாழ்த்துகளால் நான் மிகவும் பெருமை அடைகிறேன். உங்களின் கனிவான செயலுக்கு நன்றி. தமிழ்நாட்டிற்கும் மலேசியாவிற்கும் இடையே மேலும் சிறந்த ஒத்துழைப்பை வளர்ப்பதற்கும், நட்புறவை வலுப்படுத்துவதற்கும் நான் உறுதியுடன் இருக்கிறேன்” என்றுள்ளார்.
Deeply honored by the warm congratulations from the Hon’ble Prime Minister of Malaysia, Thiru. @anwaribrahim Avl. Thank you for your gracious gesture. I am committed to fostering greater cooperation and enhancing the bond of friendship between Tamil Nadu and Malaysia. https://t.co/EnXqhPDmsp
— TVK Vijay (@TVKVijayHQ) May 12, 2026
மலேசியா – தமிழ்நாடு இடையிலான உறவு:
மலேசியாவில் வசிக்கும் பெரும்பாண்மையான தமிழர்கள் தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள். அந்நாட்டின் பொருளாதாரம் மற்றும் கலாச்சார வளர்ச்சியில் தமிழர்களின் பங்கு மகத்தானது. விஜய்யின் அரசியல் வருகையும் வெற்றியும் மலேசிய வாழ் தமிழர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பிரதமரின் இந்த வாழ்த்து முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
May 13, 2026 10:11 AM IST


