Last Updated:
இந்திய அணி தனது ஆதிக்கத்தைத் தொடர்ந்து தக்கவைத்து வருவது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று வெளியிட்ட ஒருநாள் போட்டிகளுக்கான (ODI) புதிய தரவரிசைப் பட்டியலில், சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி தனது முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. இந்திய அணி ஒரு ரேட்டிங் புள்ளியை இழந்து 118 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்தாலும், இரண்டாவது இடத்தில் உள்ள நியூசிலாந்து அணியை விட (113 புள்ளிகள்) 5 புள்ளிகள் முன்னிலையில் உள்ளது. ஆஸ்திரேலிய அணி 109 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் நீடிக்கிறது.
இந்த புதிய தரவரிசை மாற்றத்தில் தென்னாப்பிரிக்க அணி 102 புள்ளிகளுடன் நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இதன் காரணமாக, பாகிஸ்தான் அணி 98 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.
இலங்கை (96), ஆப்கானிஸ்தான் (93), இங்கிலாந்து (89), வங்கதேசம் (84) மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் (74) ஆகிய அணிகள் முறையே அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன. இந்த வருடாந்திர தரவரிசைப் பட்டியலில் மே 2025-க்கு பிறகு விளையாடப்பட்ட போட்டிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
ஐசிசி தரவரிசைப் பட்டியல் என்பது வெறும் எண்கள் என்று மட்டுமே கருத முடியாது. இது 2027-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கோப்பைத் தொடருக்கான நேரடித் தகுதிக்கும் மிக முக்கியமானதாக உள்ளது. மார்ச் 31, 2027 நிலவரப்படி தரவரிசையில் முதல் 8 இடங்களைப் பிடிக்கும் அணிகள், தொடரை நடத்தும் தென்னாப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுடன் நேரடியாக உலகக் கோப்பைக்குத் தகுதி பெறும்.
மொத்தம் 14 அணிகள் பங்கேற்கும் அந்தத் தொடரில், மீதமுள்ள 4 இடங்களுக்கு ஸ்காட்லாந்து, அமெரிக்கா, நெதர்லாந்து, நேபாளம் போன்ற நாடுகள் கடுமையாகப் போட்டியிட்டு வருகின்றன. இந்திய அணி தனது ஆதிக்கத்தைத் தொடர்ந்து தக்கவைத்து வருவது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

