Last Updated:
முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் என்ற வலுவான ஸ்கோரை எட்டியது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இளம் வீரர் உர்வில் படேல் 13 பந்துகளில் அரைச்சதம் அடித்து புதிய ரிக்கார்டை ஏற்படுத்தியுள்ளார்.
ஐபிஎல் 2026 தொடரின் 53-வது லீக் போட்டியில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதி வருகின்றன. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் என்ற வலுவான ஸ்கோரை எட்டியது.
அந்த அணியின் தொடக்க வீரர் ஜோஷ் இங்கிலிஸ் அதிரடியாக விளையாடி 33 பந்துகளில் 10 சிக்ஸர்கள் மற்றும் 6 பவுண்டரிகளுடன் 85 ரன்கள் குவித்து நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்தார். இங்கிலிஸின் அதிரடியால் பவர்-பிளே ஓவர்களில் மட்டும் லக்னோ அணி 91 ரன்களைக் குவித்தது. அவருக்கு அடுத்தபடியாக ஷாபாஸ் அகமது ஆட்டமிழக்காமல் 25 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோர் 200-ஐக் கடக்க உதவினார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் தரப்பில் பந்துவீச்சில் ஜேமி ஓவர்டன் சிறப்பாகச் செயல்பட்டு 4 ஓவர்களில் 36 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 முக்கிய விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அவருக்கு உறுதுணையாக அன்ஷுல் கம்போஜ் 2 விக்கெட்டுகளையும், நூர் அகமது 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களம் இறங்கி சென்னை அணி விளையாடி வருகிறது.
தொடக்க வீரர்களாக களம் இறங்கிய சஞ்சு சாம்சன் 14 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து களம் இறங்கிய உர்வில் படேல் சிக்சரும் பவுண்டரியுமாக விளாசி ஸ்கோரை உயர்த்தினார்.
13 பந்துகளை எதிர்கொண்ட அவர் 7 சிக்சர் மற்றும் 1 பவுண்டரியுடன் 50 அடித்து சாதனை படைத்துள்ளார். இது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் குறைந்த பந்துகளில் எடுக்கப்பட்ட அரைச்சதம் ஆகும்.
முன்னதாக 13 பந்துகளுக்கு ராஜஸ்தான் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அரைச்சதம் அடித்திருந்தார். அவரது ரிக்கார்டை இன்று சமன் செய்துள்ளார் உர்வில் படேல்.


