கோயில்கள் அல்லது வழிபாட்டுத் தலங்கள் தொடர்பான பிரச்சினைகள், கடந்த வாரம் அமைச்சரவையால் நிர்ணயிக்கப்பட்ட செயல்முறைப்படி இனி கையாளப்படும் என்று டிஜிட்டல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் தியோ உறுதியளித்துள்ளார்.
வழிபாட்டுத் தலங்கள் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு, மத்திய, மாநில மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் என அந்தந்த அதிகார வரம்புகளுக்கு ஏற்ப மூன்று மட்டங்களிலான அரசாங்கங்களின் ஒத்துழைப்பு தேவை என்று அமைச்சரவையின் முடிவு குறிப்பிடுவதாக அவர் கூறினார்.
ஏற்படுத்தப்பட்ட இந்த செயல்முறையானது பல தரப்பினரை உள்ளடக்கியது என்றும், இது எந்தவொரு தனிப்பட்ட அமைப்பின் ஒருதலைப்பட்சமான முடிவு அல்ல என்றும் அவர் வலியுறுத்தினார்.
“நிலம் மாநில அதிகார வரம்பிற்கு உட்பட்டது. கோயில்களின் பதிவு, மத்திய அரசின் கீழ் உள்ள சங்கங்களின் பதிவாளரை (ROS) உள்ளடக்கியது.”
“இதற்கிடையில், கட்டுமான அம்சங்கள் உள்ளாட்சி அமைப்பின் அதிகார வரம்பிற்குள் வருகின்றன,” என்று அவர் விளக்கினார்.”இந்தப் பிரச்சனையைத் தீர்த்து, நாம் முன்னோக்கிச் செல்வதற்கு, அனைத்துத் தரப்பினருக்கும் இடையே ஒத்துழைப்பை எவ்வாறு உறுதி செய்ய முடியும் என்பதை நாம் பார்க்க வேண்டும்,” என்று இன்று கோலாலம்பூர், ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் உள்ள தேவி ஸ்ரீ பத்திரகாளியம்மன் கோயிலில் நடைபெற்ற அன்னையர் தினக் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.

