தமிழ்த்தேசியம் தனிநபர் தோல்விகளால் எடைபோட முடியாத ஓர் இருப்பின் அரசியல்
தமிழ்த்தேசியம் ஒரு தோற்றுப்போன கோட்பாடா?
தமிழகச்சட்டமன்ற தேர்தலில் சீமானின் வாக்கு வங்குரோத்தை தொடர்ந்து ஒரு வாதம் சமூக ஊடகங்களை ஆட்கொண்டிருக்கிறது .
தமிழ்தேசியம் தலைவரோடு தோற்றுப்போய்விட்டது , அது ஒரு தோற்றுப்போன கோட்பாடு.
உண்மையில் தமிழ்தேசியம் தோற்றுப்போய்விட்டதா ?
ஈழத்தமிழர்களாகிய நாம் நிலத்திலும் புலத்திலும் இருந்து நமது தேசிய சிந்தனையை சீமானிடம் மட்டும் அடகுவைத்ததுதான் , இதற்கான மூலகாரணம்.
தர்க்கமற்ற வாதம்
உண்மையில் தமிழ்த்தேசியம் பரந்து பேசப்படவேண்டும் , ஒருவரிடம் தங்கியோ அல்லது ஒருவர் மட்டும் உரிமைகோரும்படியாகவோ விட்டுவிடக்கூடாது .
இது எல்லா இடங்களுக்கும் பொருந்தும்
அப்படி விட்டு விடுவதால்தான் அந்த நபர்களின் தோல்வி தமிழ்த்தேசியத்தின் தோல்வியாக கருதப்படுகிறது .
காலம் கடந்து நமது தலைமுறைகளுக்கு சரியான செய்தியும் விளக்கமும் கிடைக்கப்பெறாததன் விளைவே இது. இந்த விவகாரத்தை தத்துவார்த்த ரீதியாக பார்ப்போம் .
ஆயுதங்கள் மௌனித்துவிட்டன, எனவே தமிழ்த் தேசியம் தோற்றுவிட்டது இது இன்றைய சமகால அரசியல் உரையாடல்களில் அடிக்கடி ஒலிக்கத் தொடங்கியிருக்கும் ஒரு தர்க்கமற்ற வாதமாகும் .
ஒரு கோட்பாட்டின் வெற்றியையும் தோல்வியையும் அதன் இராணுவ வலிமையைக் கொண்டு மட்டும் அளவிடுவது வரலாற்று அறியாமையாகும்.
அரசியல் தத்துவவாதி கார்ல் வான் கிளாஸ்விட்ஸ் (Carl von Clausewitz) முன்னர் கூறியது போல, “போர் என்பது அரசியல் நோக்கங்களை அடைவதற்கான ஒரு கருவி மட்டுமே , அதுவே இலக்கு அல்ல.
உண்மையில் கருவி உடைந்திருக்கலாம், ஆனால் அந்த நிலத்தை, மொழியை, உரிமையை மீட்கத் துடிக்கும் தமிழ்த் தேசியம் எனும் அடிப்படை இலக்கு இன்றும் சிதையாமல் இருப்பதே அந்த கோட்பாட்டின் முதல் வெற்றியாகும்.
இருப்பின் அரசியல்
ஒன்று தமிழ்த் தேசியம் என்பது யாரோ ஒருவருக்கு எதிரான கோட்பாடு அல்ல , அது ஒரு இனத்தின் இருப்பிற்கான தற்காப்புத் தத்துவம். கடந்த 1948ல் குடியுரிமை பறிக்கப்பட்டபோதும், அதேபோல 1956 ல் மொழி ஒடுக்கப்பட்டபோதும் தமிழர்களை ஒரு பாதுகாப்புக் கவசமாக நின்று காத்தது இந்தத் தேசிய உணர்வுதான்.
நவீன அரசியல் ஆய்வாளர் பெனடிக்ட் ஆண்டர்சன் தேசத்தை ஒரு “கற்பிதம் செய்யப்பட்ட சமூகம்” (Imagined Community) என்று குறிப்பிடுகின்றார் .
இன்று புவியியல் ரீதியாக உலகம் பரந்து வாழ்ந்தாலும், லண்டன் முதல் பாரிஸ் வரை ஒரு தமிழன் தன்னை ஒரு பெரும் நீண்ட வரலாற்று இனத்தின் வாரிசாக உணர்வது, இந்தக்கோட்பாடு நிலங்களைக் கடந்து மக்களின் மனங்களில் ஒரு வேனவாவாக மாறியிருப்பதை நிறுவுகிறது.
யூதத் தேசியத்தின் படிப்பினை
உலக வரலாற்றில் எந்த ஒரு தேசிய இனமும் முதல் சில தசாப்தங்களில் வெற்றியை சுவைத்ததில்லை.
சுமார் 2000 ஆண்டுகள் நாடற்றவர்களாகச் சிதறடிக்கப்பட்ட யூதர்களை ஒன்றிணைத்தது சியோனிசம் என்ற தேசிய உணர்வுமட்டுமே , அவர்கள் தங்கள் போர் முனையில் வெல்வதற்கு முன்பே, தங்களின் பொருளாதார மற்றும் அறிவுப் பலத்தால் உலக நாடுகளின் தீர்மானங்களை மாற்றியமைக்கும் அதாவது பேரம் பேசும் ஒரு சக்தியாக உருவெடுத்தனர்.
தமிழ்த் தேசியமும் இன்று அதே பரிணாம வளர்ச்சியை நோக்கி நகர்கிறது. புலம்பெயர் தமிழர்களிடம் இருக்கும் பொருளாதாரப் பலம், இனி வெறும் வாழ்க்கைச்செலவுக்கான நிதியாக மட்டுமல்லாமல் சர்வதேச இராஜதந்திர மேசைகளில் தேசம் காக்கும் அரசியல் சக்தியாக மாற வேண்டிய தருணம் இதுவாகும்.
இந்த நேரத்தில் நா பிரழ்வதும் தனிப்பட்ட விருப்புகளுக்காக கொள்கைகளை கொலைசெய்யப்பட்டதாக கூறுவதுமே அபத்தமாகும் .
மென்மையான அதிகாரம் எனும் புதிய ஆயுதம்
இன்றைய உலகில் போர் என்பது வெறும் போர்க்களங்களோடு நின்றுவிடுவதில்லை.
ஜோசப் நை (Joseph Nye) என்ற அறிஞர் முன்மொழிந்த மென்மையான அதிகாரம் (Soft Power) எனும் தத்துவத்தின்படி, ஒரு இனம் தனது கல்வி, கலாச்சாரம் மற்றும் பொருளாதார முதலீடுகள் மூலம் சர்வதேசச் சமூகத்தில் செல்வாக்கு செலுத்த முடியும்.
ஆயுதப் போராட்டம் மௌனித்திருக்கலாம், ஆனால் அந்தப் போராட்டத்தை ஏந்த வைத்த கோட்பாடோ அல்லது நியாயமான காரணமோ இன்னும் சாகவில்லை.
சர்வதேச மனித உரிமை அமைப்புகள் முதல் உலக நாடுகளின் நாடாளுமன்றங்கள் வரை இன்றும் ஈழத் தமிழர்களின் விவகாரம் ஒரு கனதியான பேசுபொருளாகவே இருக்கிறது என்றால், அதற்குப் பின்னால் தமிழ்த் தேசியம் எனும் கருத்தியல் ஓர் அழுத்தமான அரசியல் சக்தியாக இயங்குவதே மூலகாரணமாகும் .
தமிழ்த் தேசியம் என்பது முடிந்துபோன ஒரு அத்தியாயம் அல்ல அது காலத்தின் தேவைக்கேற்பத் தன்னைத் தகவமைத்துக் கொண்டு, புதிய வடிவில் (Digital and Diplomatic) பயணத்தைத் தொடரும் ஒரு தத்துவத் தொடர்ச்சியாகும் .
வெறும் கனவு அல்ல
வரலாறு மிக நீண்டது அதில் ஒரு பக்கத்தை வைத்து முழுப் புத்தகத்தையும் எடை போட முடியாது.
அன்று ஈழவர்களாக நமது ஆயுதமே நமது வீரமாகும். ஆனால் இன்று நம் ஆயுதங்கள் கல்வி, பொருளாதாரம் மற்றும் இராஜதந்திரம் ஆகியவையே, கருவிகள் மாறலாம், ஆனால் நமது மண்ணில் நாம் சுதந்திரமாக நமக்காக கௌரவத்தோடு வாழ வேண்டும் என்ற இலக்கு மாறாது.
தமிழ்த் தேசியம் என்பது வெறும் கனவு அல்ல
அது எமது அடுத்த தலைமுறை நாம் யார்? என்று தெரியாமல் நமது வரலாற்றை அறியாமல் தொலைந்து போகாமல் இருப்பதற்கான இறுதிப் போராட்டமாகும்.
எனவேதான் தமிழ்த்தேசியம் தோற்றுப்போனது என்ற கருத்தியலை கனவில் நினைப்பதுகூட ஒருவிதமான தற்கொலை மனநிலையாகும் .
நமக்கு பிடித்த ஒருவரை நியாயப்படுத்த அல்லது பிடிக்காதவரை விமர்சிக்க ஒரு பொதுக்கருத்தியலை வீழ்த்துவது ஒருபோதும் ஆரோக்கியமானதாகாது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |
