
வியட்நாம் ஜனாதிபதி டோ லாம் இன்று உயர்மட்ட குழுவுடன் இலங்கைக்கு வருகை தருகிறார். அவரது விஜயத்தை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு பொதுச் செயலாளரும், அந்நாட்டு ஜனாதிபதியுமான டோ லாம் இன்று (07) இரவு உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கைக்கு வருகை தருகிறார். உயர்மட்ட அதிகாரிகள் அடங்கிய பிரதிநிதி குழுவும் அவருடன் வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் அழைப்பின்பேரிலேயே இந்த விஜயம் மேற்கொள்ளப்படுவதாக வியட்நாம் வெளிவிவகார அமைச்சகம் அறிவித்துள்ளது. சுமார் 200 பேர் கொண்ட பிரதிநிதி குழு இந்த பயணத்தில் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வியட்நாம் ஜனாதிபதி டோ லாம் நாளை (08) இலங்கை நாடாளுமன்றத்திலும் உரையாற்ற உள்ளார். இந்த விஜயம் இரு நாடுகளுக்கிடையேயான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான வியட்நாம் தூதுவர் டிரின் தி டாம் தெரிவிக்கையில், இந்த விஜயத்தின் மூலம் வர்த்தகம், முதலீடு, விவசாயம், விமானப் போக்குவரத்து மற்றும் லாஜிஸ்டிக்ஸ் உள்ளிட்ட துறைகளில் புதிய ஒப்பந்தங்கள் உருவாக வாய்ப்புள்ளதாக கூறினார்.
அதேபோல், டிஜிட்டல் பொருளாதாரம், புதுமைத்துறை மற்றும் ஆற்றல் மாற்றம் போன்ற எதிர்கால வளர்ச்சி துறைகளிலும் இரு நாடுகளுக்கும் இடையே புதிய ஒத்துழைப்புகள் உருவாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கிடையில், வியட்நாம் ஜனாதிபதி விஜயத்தை முன்னிட்டு இன்று மற்றும் நாளை கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படும் என இலங்கை பொலிஸார் அறிவித்துள்ளனர்.
இன்று இரவு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து கொழும்பு நகரம் வரை ஜனாதிபதி வாகன அணிவகுப்பு செல்லும் நேரத்திலும், நாளை காலை மற்றும் மாலை ஜனாதிபதி செயலகம், கொழும்பு பொது நூலகம், இலங்கை நாடாளுமன்றம் மற்றும் ஜனாதிபதி மாளிகை நோக்கி நடைபெறும் உத்தியோகபூர்வ பயணங்களின்போதும் போக்குவரத்து கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பாதுகாப்பு ஏற்பாடுகளின் காரணமாக குறிப்பிட்ட சாலைகளில் கனரக வாகனங்கள் இரண்டு மணி நேரத்திற்கு முன்பே தடை செய்யப்படும் என்றும், மற்ற வாகனங்களுக்கும் தற்காலிக கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

