தமிழகத்தில் திரை நட்சத்திரம் ஜோசப் விஜய் சந்திரசேகர் தலைமையில் அமைந்துள்ள புதிய தமிழக வெற்றி கழக அரசாங்கம், தற்போது இலங்கையின் வசம் உள்ள கச்சத்தீவை மீண்டும் கோருவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மறைந்த முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க எடுத்த ராஜதந்திர முயற்சிகளால்தான் கச்சத்தீவு இலங்கைக்குக் கிடைத்தது என்று சுட்டிக்காட்டிய அவர், புதிய தமிழக அரசு அதனை மீளக் கோரும்போது தற்போதைய இலங்கை அரசாங்கம் அதனை விட்டுக்கொடுக்கக்கூடும் என்பதால் நாடு கச்சத்தீவை இழக்கும் அபாயம் உள்ளதாக எச்சரித்துள்ளார்.
இலங்கையர்களின் ரகசியத் தகவல்கள்
அத்துடன், இலங்கையர்களின் கைரேகை உள்ளிட்ட உயிரியல் தரவுகளை உள்ளடக்கிய டிஜிட்டல் அடையாள அட்டை தயாரிக்கும் ஒப்பந்தம் தென்னிந்தியாவைச் சேர்ந்த ‘மெட்ராஸ் செக்யூரிட்டீஸ்’ என்ற நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளதையும் சாமர சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த காலங்களில் இந்திய விரிவாக்கக் கொள்கை குறித்துப் பேசியவர்களே இன்று இலங்கையர்களின் ரகசியத் தகவல்கள் வெளிநாட்டு நிறுவனங்களுக்குச் செல்வதற்கு வழிவகுத்துள்ளதாக அவர் அதன்போது விமர்சித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |
