கோலாலம்பூர்:
நாட்டின் சர்ச்சைக்குரிய 2012-ஆம் ஆண்டு பாதுகாப்புச் சட்டமான ‘சோஸ்மா’ (SOSMA)-வில் உள்ள ஒடுக்குமுறை விதிகளை அகற்ற, அடுத்த மூன்று மாதங்களுக்குள் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சட்டத் திருத்தத்தைக் கொண்டு வர வேண்டும் என ஜசெக மூத்த தலைவர் லிம் குவான் எங் வலியுறுத்தியுள்ளார்.
மாரா (MARA) சட்டத் திருத்த விவகாரத்தில் அரசு காட்டும் அதே வேகத்தை, மனித உரிமைகளைப் பாதிக்கும் இச்சட்டத்தைச் சீரமைப்பதிலும் காட்ட வேண்டும் என்று அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2022-ஆம் ஆண்டு எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது 28 நாட்கள் தடுத்து வைக்கும் சோஸ்மா பிரிவை அன்வார் எதிர்த்ததை நினைவூட்டிய லிம் குவான் எங், அண்மையில் 16 வயது சிறுமி ஒருவர் இச்சட்டத்தின் கீழ் ஒன்பது நாட்கள் தடுத்து வைக்கப்பட்டு பாதிக்கப்பட்டதைக் கடுமையாகச் சாடினார்.
பெண்களுக்கும் சிறுவர்களுக்கும் பிணை வழங்குவதில் சோஸ்மா சட்டத்தின் 13-வது பிரிவு விதிவிலக்கு அளித்த போதிலும், அந்தச் சிறுமிக்கு அது மறுக்கப்பட்டது ஏன் என அவர் கேள்வி எழுப்பியுள்ளதோடு, சீர்திருத்தங்கள் மீதான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை நிரூபிக்க இதுவே சரியான தருணம் என்றும் வலியுறுத்தியுள்ளார்.




