Last Updated:
மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தோல்வியை கிண்டல் அடித்துவரும் காங்கிரஸ் கட்சியினருக்கு ராகுல் காந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தோல்வியை கிண்டல் அடித்துவரும் காங்கிரஸ் கட்சியினருக்கு அக்கட்சியின் மூத்த தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
294 சட்டமன்றத் தொகுதிகளை கொண்ட மேற்குவங்க சட்டப்பேரவைக்கு கடந்த 23 மற்றும் 29 ஆகிய இரண்டு தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. ஃபால்டா தொகுதியில் வாக்குப்பதிவில் நடைபெற்ற முறைகேடு காரணமாக அங்கு வரும் 21 ஆம் தேதி மறு தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதனால், 293 தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. 148 தொகுதிகளில் வெற்றி பெறக்கூடிய கட்சி ஆட்சி அமைக்கும் எனும் நிலையில், பாஜக 207 தொகுதிகளில் வென்று அறுதிப் பெரும்பான்மை பெற்றுள்ளது. இதன்மூலம் மம்தா பானர்ஜியின் 15 ஆண்டு கால ஆட்சியை பாஜக முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் 215 இடங்களை கைப்பற்றிய திரிணமுல் காங்கிரஸ் இந்த முறை 80 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
மேற்கு வங்கத்தை 17 ஆண்டுகள் ஆண்ட காங்கிரஸ் கட்சி இந்த தேர்தலில் இரண்டு தொகுதிகளிலும், 33 ஆண்டுகள் ஆட்சி செய்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றன. ஆம் ஜனதா உன்னயன் கட்சி இரண்டு தொகுதிகளிலும், அனைத்திந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி ஒரு இடத்திலும் வென்றன. குறிப்பாக பவானிபூர் தொகுதியில் போட்டியிட்ட திரிணமுல் காங்கிரஸ் தலைவரும், முதலமைச்சருமான மம்தா பானர்ஜி பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரியிடம் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
இதனைத் தொடர்ந்து காங்கிரஸார் திரிணாமுல் காங்கிரஸ் தோல்வியை கிண்டல் அடித்துவருகின்றனர். இந்நிலையில் அவர்களுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி எச்சரிக்கைவிடுத்துள்ளார். காங்கிரஸைச் சேர்ந்த சிலரும், பிறரும், திரிணாமுல் காங்கிரஸின் தோல்வியைக் கண்டு எள்ளி நகையாடி வருகின்றனர்.
Some in the Congress, and others, are gloating about TMC’s loss.
They need to understand this clearly – the theft of Assam and Bengal’s mandate is a big step forward by the BJP in its mission to destroy Indian democracy.
Put petty politics aside. This is not about one party or…
— Rahul Gandhi (@RahulGandhi) May 5, 2026
அசாம் மற்றும் வங்காள மக்களின் மக்கள் ஆணையைத் திருடியிருப்பது, இந்திய ஜனநாயகத்தை அழிக்கும் தனது குறிக்கோளை நோக்கி பாஜக எடுத்து வைத்துள்ள ஒரு மிகப்பெரிய முன்னேற்றப் படி என்பதை எள்ளி நகையாடுபவர்கள் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். சிறுமைத்தனமான அரசியலை ஒருபுறம் ஒதுக்கி வையுங்கள். இது ஏதோ ஒரு கட்சியைப் பற்றியதோ அல்லது மற்றொரு கட்சியைப் பற்றியதோ அல்ல. இது இந்தியாவை பற்றியது” எனத் தெரிவித்துள்ளார்.


