Last Updated:
5 மாதங்களுக்குப் பின் அவரின் மனைவி மற்றும் மாமனார் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேசத்தில் இளைஞர் மர்ம மரணத்தில் திடீர் திருப்பமாக 5 மாதங்களுக்குப் பின் அவரின் மனைவி மற்றும் மாமனார் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேசம் மாநிலம் ஆக்ராவைச் சேர்ந்தவர் ஜிதேந்திரா. இவரின் மனைவி தானு. கடந்த நவம்பர் 22 ஆம் தேதி தானுவின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. அன்றைய தினம் தனது தாய் வீட்டிலேயே கணவர் மற்றும் குடும்பத்தினருடன் இளம்பெண் கேக் வெட்டி பிறந்தநாளை சிறப்பித்தார். இதையடுத்து அனைவரும் இரவு உணவு அருந்திவிட்டு தூங்கச் சென்றனர்.
இந்நிலையில், மறுநாள் அதிகாலை 3 மணியளவில் ஜிதேந்திராவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. உடனே, அருகில் உள்ள மருத்துவமனைக்கு குடும்பத்தினர் அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், அங்கு ஜிதேந்திராவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இதைக்கேட்டு குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்தனர். மேலும் இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
உடற்கூராய்வில் மரணத்திற்கான காரணம் தெளிவாக புலப்படவில்லை. இதனால், சந்தேக மரணம் என்று யமுனா காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும் ஜிதேந்திரா மரணம் தொடர்பாக மாதிரிகள் சேகரிக்கப்பட்டு தடயவியல் ஆய்வகத்திலும் ஆய்வுக்கு உட்டுப்படுத்தப்பட்டது. இதனிடையே, ஜிதேந்திரா மரணத்தில் சந்தேகம் உள்ளதாக கூறி அவரின் குடும்பத்தினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
அதன்பேரில் வழக்கு யமுனாவில் இருந்து கமலா நகர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. விசாரணையில் அண்மைக் காலமாக இளம் தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது தெரியவந்தது. இதனால், ஜிதேந்திரா மனைவியுடன் தனது மாமனார் வீட்டிலேயே தஞ்சமடைந்திருந்தார் என்பது தெரியவந்தது. இதனிடையே தடயவியல் ஆய்வக அறிக்கை வெளியானது. அதில், சம்பவத்து அன்று ஜிதேந்திரா அருந்திய மதுபானத்தில் விஷம் கலந்திருந்தது அம்பலமானது.
இதையடுத்து விசாரணையை தீவிரப்படுத்தியதில் ஜிதேந்திராவுக்கு விஷம் கலந்து கொடுத்ததை அவரது மாமனார் மகேந்திரா ஒப்புக்கொண்டார். அதற்கு தானுவும் உடந்தையாக இருந்துள்ளார். மேலும் தனது மகளுடன் ஜிதேந்திரா அடிக்கடி சண்டையிட்டதால், அவரை தீர்த்துக்கட்ட திட்டமிட்டதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து கொலை வழக்காக மாற்றிய போலீசார், இளைஞரின் மனைவி தானு, அவரின் மாமனார் மகேந்திராவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சிறு குடும்ப தகராறில் மகளின் பிறந்நாள் அன்று மருமகனுக்கு மதுபானத்தில் விஷம் கலந்து கொடுத்து மாமனாரே கொலை செய்தது உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இயற்கை மரணம் போன்று நாடகமாடிய மனைவியும், மாமனாரும் தடயவியல் ஆய்வக அறிக்கை மூலம் 5 மாதங்களுக்குப் பின் சிக்கியது பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.
மனைவியின் பிறந்தநாளில் கணவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி.. 5 மாதங்களுக்குப் பின் வெளியான பகீர் தகவல்!

