Last Updated:
20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 225 ரன்கள் என்ற இமாலய இலக்கை எட்டியது. டெல்லி தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2026-ன் 43-வது லீக் போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி கேப்பிடல்ஸ் அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.
தொடக்க வீரர்களாகக் களமிறங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் ரன்களிலும், வைபவ் சூர்யவன்ஷி 4 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இருப்பினும், கேப்டன் ரியான் பராக் மற்றும் விக்கெட் கீப்பர் துருவ் ஜூரெல் ஜோடி அதிரடியாக விளையாடி அணியை மீட்டெடுத்தது.
ரியான் பராக் 50 பந்துகளில் 8 சிக்ஸர்கள் மற்றும் 5 பவுண்டரிகளுடன் 90 ரன்கள் குவித்தார். துருவ் ஜூரெல் 42 ரன்களும், இறுதியில் களமிறங்கிய டோனோவன் ஃபெரீரா அதிரடியாக விளையாடி 14 பந்துகளில் 47 ரன்களும் எடுத்தனர். இதன் மூலம் ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 225 ரன்கள் என்ற இமாலய இலக்கை எட்டியது. டெல்லி தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
226 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களம் புகுந்த டெல்லி அணிக்கு, தொடக்க வீரர்கள் பதும் நிசங்கா மற்றும் கே.எல். ராகுல் ஜோடி அதிரடியான தொடக்கத்தை அளித்தனர். நிசங்கா 33 பந்துகளில் 62 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
சிறப்பாக விளையாடிய கே.எல். ராகுல் 40 பந்துகளில் 75 ரன்கள் குவித்து வெற்றிக்கு வலுவான அடித்தளம் அமைத்தார். இவர்களைத் தொடர்ந்து நிதிஷ் ராணா 33 ரன்களும், இறுதியில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 18 ரன்களும், அசுதோஷ் சர்மா 25 ரன்களும் சேர்த்தனர்.
19.1 ஓவரில் டெல்லி அணி 3 விக்கெட் இழப்பிற்கு 226 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ராஜஸ்தான் தரப்பில் ஜோப்ரா ஆர்ச்சர், துஷார் தேஷ்பாண்டே மற்றும் ரவீந்திர ஜடேஜா தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
இந்த வெற்றியின் மூலம் டெல்லி அணி 6 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. மேலும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் டெல்லி அணி சேஸிங் செய்த அதிகபட்ச ஸ்கோர் இது என்பது குறிப்பிடத்தக்கது.
May 01, 2026 11:54 PM IST


