உலகளாவிய எரிசக்தி நெருக்கடிக்கு மத்தியில் தொழிலாளர்களின் நலனைப் பாதுகாக்கவும், நாட்டின் பொருளாதாரத் திறனை மேம்படுத்தவும் மாநில அரசுகளுடன் இணைந்து மனிதவள அமைச்சு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இன்று கோலாலம்பூரில் நடைபெற்ற மாநில மனிதவள ஆட்சிக்குழு உறுப்பினர்களுடனான ஒருங்கிணைப்புக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ இரமணன் இராமகிருஷ்ணன், மக்கள், தொழில்துறைக்கு நேரடிப் பலன் தரும் கொள்கைகளை விரைவுபடுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினார்.
உலகளாவிய பொருளாதார மாற்றங்களுக்கு ஏற்ப, நமது தொழிலாளர்கள் குறிப்பாக செமிகண்டக்டர் போன்ற துறைகளில் புதிய திறன்களைப் பெறுவது அவசியம் என கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் வலியுறுத்தினார். கடந்த மார்ச் 31, 2026 முதல் அமலுக்கு வந்துள்ள ‘கிக் தொழிலாளர் சட்டம்’ மூலம் இத்துறையில் உள்ளவர்களுக்கு அடிப்படைத் தொழிலாளர் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார். தொழிலாளர் நலனை விரிவுபடுத்தும் நோக்கில், 2026-ஆம் ஆண்டில் மட்டும் 8 சட்டத் திருத்தங்களை மேற்கொள்ள அமைச்சு இலக்கு நிர்ணயித்துள்ளது.
மேலும், TVET கல்வி உயர்வு வழியாக மனிதவளத் துறையின் கீழ் உள்ள கல்வி நிறுவனங்களில் பயின்ற மாணவர்களின் வேலைவாய்ப்பு விகிதம் 95.5 விழுக்காடாக உயர்ந்துள்ளது. இது வெளிநாட்டுத் தொழிலாளர்களைச் சார்ந்திருப்பதைக் குறைக்க உதவும் எனவும் இரமணன் விளக்கமளித்தார்.
வரும் ஜூன் 2026 முதல் சமூகப் பாதுகாப்பு அமைப்பான பெர்கேசோவின் மூலம் 24 மணி நேர ‘ஸ்கிம் லிண்டங்’ சேவை அறிமுகம் செய்யப்படவுள்ளது. இது வேலை நேரத்திற்கு வெளியேயும் தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பை வழங்கும் எனக் குறிப்பிட்ட அமைச்சர், மே தினக் கொண்டாட்ட முக்கிய அறிவிப்பாக நாளை மே 1-ஆம் தேதி புக்கிட் ஜாலில் உள்ள யூனிஃபி வளாகத்தில் நடைபெறும் தேசிய அளவிலான தொழிலாளர் தினக் கொண்டாட்டத்தில் மலேசியத் தொழிலாளர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையிலான சிறப்பு அறிவிப்பு ஒன்றை பிரதமர் வெளியிடுவார் என்றும் தெரிவித்தார்.
ராமேஸ்வரி ராஜா





