சென்னை:
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சியைப் பிடிக்கும் எனத் தேர்தலுக்குப் பிறகு நடத்தப்பட்ட கருத்துக்கணிப்புகளின் முடிவுகள் தெரிவிக்கின்றன.
புதன்கிழமை (ஏப்ரல் 29) மாலை வரை தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்ததால் கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிடத் தடை விதிக்கப்பட்டிருந்தது.
அந்தத் தடை புதன்கிழமை மாலை முடிவுக்கு வந்ததையடுத்து, தமிழகத்தில் பல்வேறு தரப்பினரும் தேர்தலுக்குப் பின்னர் நடத்திய கருத்துக்கணிப்புகள் வரிசையாக வெளியாகி வருகின்றன.
ஆக்சிஸ், சாணக்கியா, என்டிடிவி பீப்பிள்ஸ் பல்ஸ், ரிபப்ளிக் டிவி-பி மார்க், மேட்ரிஸ், டைம்ஸ் நவ் ஆகிய ஊடகங்களும் தனியார் நிறுவனங்களும் நடத்திய கருத்துக்கணிப்புகளின் முடிவுகள் புதன்கிழமை வெளியிடப்பட்டன.
அவற்றுள் பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் திமுக கூட்டணிக்குச் சாதகமாக அமைந்துள்ளன. திமுக மீண்டும் ஆட்சியமைக்கும் என அவை கணித்துள்ளதால் அக்கட்சியினர் மத்தியில் உற்சாகம் நிலவுகிறது.
திமுக, குறைந்தபட்சம் 125 முதல் 145 தொகுதிகளில் வெற்றிபெறும் என ஆக்சிஸ், என்டிடிவி, ரிபப்ளிக் டிவியின் கணிப்புகள் தெரிவிக்கி்ன்றன. சாணக்கியா நடத்திய கருத்துக்கணிப்பில் திமுக கூட்டணிக்கு 145 முதல் 170 தொகுதிகளில் வெற்றி கிடைக்கும் எனத் தெரியவந்துள்ளது.
புதன்கிழமை மாலை வரை வெளியான கருத்துக்கணிப்புகளில், டைம்ஸ் நவ் ஊடகத்தின் கணிப்பு மட்டுமே அதிமுகவுக்குச் சாதகமாக உள்ளது. அதிமுகவுக்கு 128 முதல் 147 தொகுதிகளில் வெற்றி கிட்டும் என அந்தக் கணிப்பு தெரிவித்தது.
விஜய் தலைமையிலான தவெகவுக்கு 12 முதல் 24 தொகுதிகளில் வெற்றி கிடைக்கும் எனக் கருத்துக்கணிப்பு முடிவுகள் கூறுகின்றன.
தவெகவுக்குச் சட்டமன்றத்தில் 18 முதல் 24 இடங்கள் கிடைக்குமென ஆக்சிஸ், என்டிடிவி, ரிபப்ளிக் டிவி நடத்திய கருத்துக்கணிப்புகளின் முடிவுகள் தெரிவிக்கின்றன.
சாணக்கியா கணிப்பில் தவெகவுக்கு 13-18, மேட்ரிஸ் 10-12, டைம்ஸ் நவ் 8-15 இடங்கள் கிடைக்கும் என முடிவுகள் தெரிவித்துள்ளன.
அதிமுக மீண்டும் முதன்மை எதிர்க்கட்சியாக உருவெடுக்கும் என்றும் விஜய்யின் முதல்வர் கனவு இப்போது நிறைவேறாது என்றும் சொல்லப்படுகிறது.
எனினும், அவர் எதிர்கொண்ட முதல் தேர்தலிலேயே குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்று முத்திரை பதிக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.




