சிரம்பான்:
நெகிரி செம்பிலான் மாநில அரசில் காலியாக உள்ள நான்கு மாநில செயற்குழு (Exco) உறுப்பினர்களின் இடங்கள் குறித்து அடுத்த வாரம் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமினுடின் ஹருண் தெரிவித்தார்.
மந்திரி பெசார் தலைமையில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில், பாரிசான் நேஷனல் (BN) சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்ததால் ஏற்பட்ட காலி இடங்கள் குறித்து ஆலோசிக்கப்படவில்லை. தற்போதைக்கு அந்தப் பொறுப்புகளுக்குப் ‘பதில் ‘ (Acting) அதிகாரிகளை நியமிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் கூறினார்.
முன்னதாக மந்திரி பெசார் அமினுடின் ஹருண் மீதான நம்பிக்கையை இழந்துவிட்டதாகக் கூறி, பாரிசான் நேஷனல் மற்றும் அம்னோவைச் சேர்ந்த 14 சட்டமன்ற உறுப்பினர்களும் மாநில அரசிற்கான ஆதரவைத் திரும்பப் பெற்றனர். இதனால் மாநிலத்தில் நிர்வாக நெருக்கடி ஏற்பட்டது.
இருப்பினும், நெகிரி செம்பிலான் யாங் டி-பெர்துவான் பெசார் துவாங்கு முஹ்ரிஸ் துவாங்கு முனாவீர் அவர்களின் சம்மதத்துடன், அமினுடின் ஹருண் தொடர்ந்து ஆட்சியை வழிநடத்த கடந்த திங்கட்கிழமை (ஏப்ரல் 27) அனுமதி வழங்கப்பட்டது.
நிர்வாகத்தில் சில இடங்கள் காலியாக இருந்தாலும், ஏற்கனவே திட்டமிடப்பட்ட அரசு நிகழ்ச்சிகள் எவ்வித பாதிப்பும் இன்றி நடைபெறும் என்று அமினுடின் உறுதி அளித்தார்.
குறிப்பாக, மே 15-ஆம் தேதி செந்தாயானில் நடைபெறவுள்ள தேசிய இளைஞர் தினக் கொண்டாட்டங்கள் வழக்கம்போல நடைபெறும். இதனைச் சிறப்பாக நடத்த மற்ற எக்ஸோ உறுப்பினர்களுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், காலியான இடங்களை நிரப்ப மற்ற அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களைத் தான் சந்தித்ததாக சமூக ஊடகங்களில் பரவும் செய்திகளை மாநில பக்காத்தான் ஹரப்பான் தலைவர் என்ற முறையில் அவர் மறுத்துள்ளார்.




