மலேசிய இந்து ஆலயங்களின் மேம்பாட்டிற்காக ‘தர்ம மாடானி’ திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ இரமணன் இராமகிருஷ்ணன் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார். ‘தர்ம மாடானி’ திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் மூலம் 300 இந்து ஆலயங்களுக்கு தலா 20,000 ரிங்கிட் வீதம் மொத்தம் 6 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதன் முதல் கட்டத்தில் 162 ஆலயங்களுக்கு 3.24 மில்லியன் ரிங்கிட் வழங்கப்பட்டது. ஆக, இதுவரை மொத்தம் 462 ஆலயங்களுக்கு சுமார் 9.24 மில்லியன் ரிங்கிட் நிதி வழங்கப்பட்டுள்ளது என இங்குள்ள பிரிக்ஃபீல்ட்ஸ் கலாலய மணடபத்தில் நடைபெற்ற நிதிக்கான மாதிரி காசோலை ஒப்படைப்பு விழாவை தொடக்கி வைத்து இரமணன் பேசினார்.
ஆலயங்களை வெறும் வழிபாட்டுத் தலங்களாக மட்டும் பார்க்காமல், அவை அந்தந்தப் பகுதிகளின் சமூகக் கூடங்களாகவும், கல்வி, கலைப் பண்பாட்டு மையங்களாகவும் திகழ வேண்டும் என்பதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம் என்று அமைச்சர் தெரிவித்தார். “இந்து ஆலயங்கள் சமூகத்தின் மையப் புள்ளிகளாகத் திகழ வேண்டும். அங்கு கல்வி வகுப்புகள், இளைஞர்களுக்கான திறன் பயிற்சிகள், சமூக மேம்பாட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்,” என அவர் வலியுறுத்தினார்.
மேலும், விண்ணப்பங்களில் குறைபாடுகள் காரணமாக நிராகரிக்கப்பட்ட 341 விண்ணப்பங்களைச் சரிசெய்து, தேவையான ஆவணங்களைப் பூர்த்தி செய்ய ஆலய நிர்வாகங்களுக்கு உரிய ஆலோசனைகளை வழங்குமாறு தனது அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.இந்த நிகழ்வில், நாடு முழுவதும் உள்ள இந்து ஆலயங்களின் பிரதிநிதிகள், சமூகத் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
ராமேஸ்வரி ராஜா
எஸ். சண்முகம்







