Last Updated:
ஐசிசி (ICC) விதிமுறைப்படி, தலை அதிர்ச்சி ஏற்பட்ட வீரர் கட்டாயம் ஏழு நாட்கள் ஓய்வில் இருக்க வேண்டும்.
பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியின்போது தலையில் காயம் அடைந்த டெல்லி அணியின் வேகப்பந்து வீச்சாளர் லுங்கி இன்கிடி அடுத்த சில போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என்று தகவல் வெளிவந்துள்ளது.
இருப்பினும் அவர் குணம் அடைந்து வருவதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நேற்று முன் தினம் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது, களத்தில் எதிர்பாராத விதமாக என்கிடி கீழே விழுந்தார். இதன் காரணமாக அவருக்கு பலத்த அதிர்ச்சி ஏற்பட்டதால், உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஸ்கேன் பரிசோதனைகளுக்குப் பிறகு அன்றிரவே அவர் வீடு திரும்பினாலும், அவருக்கு தலை அதிர்ச்சி (Concussion) ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டது.
ஐசிசி (ICC) விதிமுறைப்படி, தலை அதிர்ச்சி ஏற்பட்ட வீரர் கட்டாயம் ஏழு நாட்கள் ஓய்வில் இருக்க வேண்டும். இதன் அடிப்படையில் அவர் அடுத்த சில போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன.
டெல்லி அணியின் வேகப்பந்து வீச்சுப் பிரிவு ஏற்கனவே பின்னடைவை சந்தித்துள்ளது. மிட்செல் ஸ்டார்க் காயத்திலிருந்து மீண்டு வந்துவிட்டாலும், அவர் மே 1-ம் தேதிக்கு பிறகுதான் விளையாட அனுமதிக்கப்படுவார். தற்போது என்கிடியும் இல்லாதது அணிக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


