Last Updated:
குறிப்பாக கடைசி பந்தில் லக்னோ அணியின் வெற்றிக்கு 7 ரன்கள் தேவைப்பட்டபோது கார்த்திக் தியாகி வீசிய அந்த பந்தை ஷமி சிக்சருக்கு அனுப்பினார்.
லக்னோவில் நேற்று நடைபெற்ற லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான போட்டியில் இரு அணிகளும் 155 ரன்கள் எடுத்ததால் ஆட்டம் சமனில் முடிந்தது. இதையடுத்து நடந்த விறுவிறுப்பான சூப்பர் ஓவரில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது.
முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்குத் தொடக்கம் மிகவும் மோசமாக அமைந்தது. லக்னோ அணியின் பந்துவீச்சாளர் மொஹ்சின் கான் அபாரமாகப் பந்துவீசி கொல்கத்தாவின் முன்வரிசை வீரர்களை நிலைகுலையச் செய்தார். அஜின்கிய ரஹானே 10 ரன்களிலும், டிம் சீஃபர்ட் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர்.
இருப்பினும், கேமரூன் கிரீன் 34 ரன்களும், இறுதி ஓவர்களில் அதிரடி காட்டிய ரிங்கு சிங் 35 பந்துகளில் 83 ரன்கள் (5 பவுண்டரி, 7 சிக்ஸர்) குவித்து அணியை மீட்டனர். இதனால் கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்தது. லக்னோ தரப்பில் மொஹ்சின் கான் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி சாதனை படைத்தார்.
156 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கும் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்தன. கேப்டன் ரிஷப் பண்ட் 42 ரன்களும், எய்டன் மார்க்ரம் 31 ரன்களும் எடுத்து ஓரளவிற்கு அடித்தளம் அமைத்தனர்.
கடைசி ஓவர்களில் ஹிம்மத் சிங் 19 ரன்களும், முகமது ஷமி 11 ரன்களும் எடுத்து அதிரடியாக ஆடி வெற்றியை நோக்கி அணியைக் கொண்டு சென்றனர். குறிப்பாக கடைசி பந்தில் லக்னோ அணியின் வெற்றிக்கு 7 ரன்கள் தேவைப்பட்டபோது கார்த்திக் தியாகி வீசிய அந்த பந்தை ஷமி சிக்சருக்கு அனுப்பினார்.
இதனால் ஸ்கோர் சமம் ஆனதை தொடர்ந்து சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் லக்னோ தரப்பில் தொடக்க வீரர்களாக மார்க்ரம் – பூரன் களம் இறங்கினர். கொல்கத்தா அணியில் சுனில் நரேன் பந்து வீச முதல் பந்திலேயே பூரன் போல்டாகி வெளியேறினார். 2 ஆவது பந்தை எதிர்கொண்ட புதிய பேட்ஸ்மேன் ரிஷப் பந்த் சிங்கிள் எடுத்தார்.
3 ஆவது பந்தை சிக்சருக்கு அடிக்க முயன்ற மார்க்ரம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதையடுத்து 2 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய கொல்கத்தா அணியில் ரின்கு சிங் முதல் பந்தையே பவுண்டரிக்கு அனுப்பி அணியை வெற்றி பெற வைத்தார்.
Apr 27, 2026 12:13 AM IST


