கொல்கத்தா, 294 தொகுதிகளை கொண்ட மேற்கு வங்காள சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. அதன்படி, முதற்கட்டமாக 152 தொகுதிகளுக்கு தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் 92.88 சதவீத வாக்குகள் பதிவானது. இதையடுத்து எஞ்சிய142 தொகுதிகளுக்கு வரும் 29ம் தேதி 2ம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. 2ம் கட்ட தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பாஜக, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் போன்ற தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், அம்மாநிலத்தின் வடக்கு பர்கனாஸ் மாவட்டம் பனிஹாடி பகுதியில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது, மேற்கு வங்காளத்தில் மாற்றத்திற்கான அலை நீண்டகாலமாக தென்பட்டு வந்தது. நேற்று நடந்த முதற்கட்ட தேர்தலில் பதிவான வாக்குகள் அந்த மாற்றத்திற்கான அலையை உறுதிப்படுத்திவிட்டது. பாஜகவுக்கு நேற்று கிடைத்த ஆதரவு வெற்றியை உறுதிபடுத்தியுள்ளது.
நேற்று நடந்த முதற்கட்ட தேர்தலில் பதிவான வாக்குகள் மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரசின் காட்டாட்சி முடிவுக்கு வருவதை உறுதிபடுத்துகிறது. வரும் 4ம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட உடன் திரிணாமுல் காங்கிரஸ் குண்டர்கள் ஒளிந்துகொள்ள இடமிருக்காது. அவர்களை யாராலும் காப்பாற்ற முடியாது. மாற்றம் வேண்டும், பாஜக அரசு வேண்டும் என்று மேற்கு வங்காளம் கூறுகிறது
இவ்வாறு அவர் கூறினார்.




