இராகவன் கருப்பையா – அண்மைய வாரங்களாக உயிருடற்சேதத்தை ஏற்படுத்திய சாலை விபத்துகளின் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளதை நம்மால் காணமுடிகிறது.
சாலை விபத்துகளுக்கு எதிராக போதிய அளவு சட்ட விதிகள் இருப்பதாகத் தோற்றமளிக்கிற போதிலும் அவை ஆக்ககரமாக அமலாக்கம் செய்யப்படுகின்றனவா அல்லது அவை போதிய அளவு கடுமையாக இல்லையா எனும் ஐயப்பாடு எழுந்துள்ளது.
ஆகக் கடைசியாக கடந்த வியாழக்கிழமை விடியற்காலையில் தலைநகர் ‘மெக்ஸ்’ நெடுஞ்சாலையில் நிகழ்ந்த ஒரு சாலை விபத்தில் வங்காள தேச சுற்றுப் பயணி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தது நம்மை வருத்தச் செய்கிறது.
மரணமடைந்த அந்த 22 வயது இளைஞர் அந்நாட்டின் பிரபல ‘உள்ளடக்க உருவாக்குனர்'(Content creator) ஆவார். அவருடைய இலட்சக் கணக்கான ரசிகர்கள் தற்போது சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
அண்மையில் மணம்புரிந்த அவர் தமது இளம் மனைவியுடன் விடுமுறையைக் கழிக்க இங்கு வந்தார். ஆனால் நம் நாட்டில் காலடி வைத்த இரண்டே மணி நேரங்களில் மரணம் அவரைத் தழுவியது.
விமான நிலையத்தில் இருந்து அவரை ஏற்றி வந்த வாடகைக் காரை மது போதையில் இருந்த 31 வயது ராணுவ அதிகாரி ஒருவரின் கார் மோதியதாக சொல்லப்படுகிறது.
வாடகைக் காரை ஓட்டியவரின் வாழ்வாதாரமும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகும்.
கடந்த 2 வாரங்களாக போதைப் பொருள் மற்றும் மது போதையில் வாகனங்களை செலுத்தியவர்களினால் ஏற்பட்ட விபத்துகளில் குறைந்தது 5 பேர் பரிதாபமாக மரணித்துள்ளனர்.
இத்தகைய கோர விபத்துகள் வீடியோவில் பதிவாகி அதிகமானோரின் கவனத்தை ஈர்த்தால் மட்டுமே கடுமையான தண்டனை வழங்கப்படும் எனும் நிலை மாற வேண்டும்.
விபத்திற்கு காரணமாயிருந்த ஓட்டுனர் போதைப் பொருளோ மதுபானமோ அருந்தியிருந்தாலும் இல்லாவிட்டாலும், மரணத்தை ஏற்படுத்தியதற்காக அவருக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டியது அவசியமாகும்.
போதையில் இல்லாவிட்டாலும், அவர்கள் கவனக் குறைவினாலோ, விளையாட்டுத்தனமாகவோ, தூக்கக் கலக்கத்தினாலோ கூட விபத்துகளை ஏற்படுத்தக் கூடும்.அத்தகையோர் மீது இன பாகுபாடு ஏதுமின்றி சரிசமமாக சட்டம் பாய்ந்தால்தான் நீதித்துறை மீது பொது மக்களுக்கு மரியாதையும் நம்பிக்கையும் ஏற்படும்.
சமீப காலமாக நெடுஞ்சாலைகளில் ஏற்படும் பல விபத்துகளுக்கு ஒரு வகையில் அரசாங்கமும் பொறுப்பேற்க வேண்டும் என்பதையும் நாம் மறுக்கலாகாது.
வேகமாகச் செலுத்தப்படும் வாகனங்கள் சில வேளைகளில் கட்டுப்பாட்டை இழந்து எதிர் திசையில் நுழையும் சம்பவங்கள் அதிகமாக நிகழ்வதால் இரு திசைகளுக்கும் இடையிலான சாலைத் தடுப்பு அரணை வலுப்படுத்துவது பற்றி சம்பந்தப்பட்ட அமைச்சின் அதிகாரிகள் இன்னமும் சிந்திக்கவில்லை.
பல இடங்களில் தற்போது உள்ள சாலைத் தடுப்பு அரண்கள் மெல்லிய இருப்பினால் செய்யப்பட்டதாகும். ஒரு மோட்டார் சைக்கிள் கூட அவற்றை இடித்துத் தள்ள வாய்ப்பிருக்கிறது.
வியாழக்கிழமை காலையில் விபத்தை ஏற்படுத்திய ராணுவ அதிகாரியின் கார் கூட எதிர் திசை சாலையில் ஊடுருவிதான் வாடகைக் காரை நேருக்கு நேர் மோதியுள்ளதாகத் தெரிகிறது.

