Last Updated:
தமிழ்நாட்டில் எங்கள் கூட்டணி மிக வலுவாக உள்ளது. தேர்தலுக்குப் பிறகு கூட்டணி அமைக்கும் வாய்ப்பு இல்லை. விஜயுடன் கூட்டணி தேவையில்லை – நிதின் நபின்
தவெக தலைவர் விஜயின் அரசியல் வருகை தமிழ்நாட்டில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் தெரிவித்துள்ளார். நெட்வொர்க் 18 குழும ஆசிரியர் ராகுல் ஜோஷிக்கு அளித்த பிரத்யேக நேர்காணலில் அவர் இதைத் தெளிவுபடுத்தினார்.
நியூஸ் 18 குழும ஆசிரியர் ராகுல் ஜோஷிக்கு நிதின் நபின் அளித்த பிரத்யேக பேட்டியில், இந்தத் தேர்தலில் திமுகவின் ஊழல், சனாதனத்திற்கு எதிரான மனப்போக்கு வெளிச்சத்துக்கு வந்துள்ளது. விஜய் அரசியலுக்கு புதிதாக வந்துள்ளார். ஆனால் புதிதாக ஒருவர் வந்தவுடன் உடனடியாக பெரிய தாக்கத்தை உருவாக்க முடியாது. தமிழ்நாட்டில் எங்கள் கூட்டணி மிக வலுவாக உள்ளது. தேர்தலுக்குப் பிறகு கூட்டணி அமைக்கும் வாய்ப்பு இல்லை. விஜயுடன் கூட்டணி தேவையில்லை; தமிழ்நாட்டில் என்.டி.ஏ கூட்டணி ஆட்சி அமைக்கும் என்றும் தெரிவித்தார்.
மேலும் தொகுதி மறுவரையறை (Delimitation) யாரால் உருவாக்கப்பட்டது? அதையே உருவாக்கியவர்கள் தங்களின் சட்டத்தை நம்பவில்லையா? அவர்கள் ஆட்சி செய்த காலத்தில் செய்த மறுவரையறையில் ஏதேனும் குறை இருந்ததா? என்று கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பேசிய நிதின் நபின் எதிர்க்கட்சித் தலைவராக வாஜ்பாய் உள்ளிட்ட பல மூத்த தலைவர்கள் இருந்துள்ளனர். ஆனால் ராகுல் காந்தியின் நடத்தை, மொழி ஆகியவை முதிர்ச்சியற்றதாக உள்ளன என்று தெரிவித்தார்.
பெண் வாக்காளர்களின் ஆதரவு குறித்து பேசிய அவர், நாடு முழுவதும் உள்ள பெண் வாக்காளர்கள் பாஜக பக்கம் உள்ளனர். மேற்கு வங்கத்திலும் இந்த நிலை மாறப்போவதில்லை. அங்கு பெண்களுக்கு மரியாதை இல்லை, அவர்கள் அச்சத்தில் வாழ்கிறார்கள். மக்கள் ஆதரவை ஆராயும்போது, மேற்கு வங்கத்தில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்பது தெளிவாகிறது என்றும் தெரிவித்தார்.
Apr 23, 2026 11:28 AM IST

