மாலைதீவு அரசாங்கத்தின் சட்டதிட்டங்களுக்கு மாறாக அந்நாட்டின் கடல் எல்லைக்குள் நுழையும் கலன்கள் மாலைதீவு பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்படும் என அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.
அரபுக் கடலில் மீன்பிடி நடவடிக்கைகளுக்காக புறப்பட்டுச் செல்லும் மற்றும் மீன்பிடி நடவடிக்கைகளை முடித்துக்கொண்டு மீண்டும் கரை திரும்பும் அனைத்து நெடுநாள் மீன்பிடிக் கலன்களும், மாலைதீவின் பிரத்தியேக பொருளாதார வலயத்தை (EEZ) கடக்கும்போது பின்பற்ற வேண்டிய புதிய நடைமுறைகளை கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
இது குறித்து அந்த திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசாந்த கஹவத்த விடுத்துள்ள விசேட அறிவிப்பில் பின்வருமாறு வலியுறுத்தியுள்ளார்.
மாலைதீவு பாதுகாப்புப் படை
மாலைதீவு அரசாங்கத்தின் சட்டதிட்டங்களுக்கு மாறாக அந்நாட்டின் கடல் எல்லைக்குள் நுழையும் கலன்கள் மாலைதீவு பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்படும்.

அவ்வாறு கைப்பற்றப்படும் கலன்களை விடுவிப்பதற்கு மாலைத்தீவு அதிகாரிகள் மிக அதிகளவிலான அபராதங்களை விதிக்கின்றனர்.
இவ்வாறான பாரிய அபராதங்களைச் செலுத்துவது கலன் உரிமையாளர்களுக்கு தாங்கிக்கொள்ள முடியாத பெரும் நிதி இழப்பை ஏற்படுத்தும்.
இத்தகைய சட்ட ரீதியான சந்தர்ப்பங்களில் தமக்காகப் பேசுவதற்கோ அல்லது தலையிடுவதற்கோ கடற்றொழில் திணைக்களத்திற்கு எவ்வித வாய்ப்பும் வழங்கப்படமாட்டாது.
எனவே, அரபிக் கடலுக்குச் செல்லும் போதும் மற்றும் மீண்டும் கரை திரும்பும் போதும் அத்துறைசார் புதிய சட்டதிட்டங்களை கடற்றொழிலாளர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்புதல்
அத்துடன் புதிய நடைமுறையின்படி கடற்றொழிலாளர்கள் பின்பற்ற வேண்டிய முக்கிய விடயங்களாக பின்வருவன குறிப்பிடப்பட்டுள்ளன.
மாலைதீவு கடல் எல்லைக்குள் நுழைவதற்கு குறைந்தது 96 மணித்தியாலங்களுக்கு முன்னதாக, உரிய விண்ணப்பப்படிவத்தைப் பூர்த்தி செய்து compliance@fisheries.gov.mv மற்றும் maldivestansitdfar@gmail.com ஆகிய இரண்டு மின்னஞ்சல் முகவரிகளுக்கும் அனுப்பி வைக்க வேண்டும்.

விண்ணப்பத்துடன் கலனின் பதிவுச் சான்றிதழ், வெளியேறல் படிவம் (Departure Form), ஊழியர்களின் விபரங்கள், கலனின் தெளிவான புகைப்படம் மற்றும் எல்லைக்குள் நுழையும் மற்றும் வெளியேறும் இடங்களைக் (Waypoints) குறிக்கும் வரைபடம் ஆகியவற்றைச் சமர்ப்பிப்பது கட்டாயமாகும்.
இந்த சட்டதிட்டங்களை மீறுவதால் ஏற்படும் நிதி மற்றும் தொழில்சார் பாதிப்புகளைத் தவிர்த்துக்கொள்ள அனைத்து கலன் உரிமையாளர்களும் கடற்றொழிலாளர்களும் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும்“ என பணிப்பாளர் நாயகம் மேலும் கேட்டுக்கொண்டுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

