
இந்திய துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் நுவரெலியா சீதா எலியாவில் உள்ள சீதையம்மன் ஆலயத்தில் வழிபாடு செய்தார். நிகழ்வில் அரசியல் மற்றும் நிர்வாக அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய துணை ஜனாதிபதி சி. பி. ராதாகிருஷ்ணன் இன்று (20) நுவரெலியா மாவட்டத்தின் சீதா எலியா பகுதியில் அமைந்துள்ள சீதையம்மன் ஆலயம் சென்று வழிபாட்டில் ஈடுபட்டார்.
இராமாயணம் தொடர்புடைய புனித ஸ்தலமாக போற்றப்படும் இந்த ஆலயத்திற்கு வருகை தந்த அவருக்கு பாரம்பரிய தமிழ் இசையுடன் உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து ஆலயத்தில் நடைபெற்ற விசேட பூஜைகளிலும் அவர் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்வில் வேலுசாமி இராதாகிருஷ்ணன் உள்ளிட்ட ஆலய அறங்காவலர் சபை உறுப்பினர்கள் இந்திய துணை ஜனாதிபதியை வரவேற்றனர்.
இந்நேரத்தில், சீதையம்மன் ஆலய அறங்காவலர் சபைத் தலைவர், இந்தியாவில் அசோகவனத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் சீதா நதியில் காணப்படும் மிதக்கும் அதிசயக் கற்களில் ஒன்றை ஆலயத்திற்கு வழங்குமாறு கோரிக்கை ஒன்றையும் முன்வைத்தார்.

