ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையே நிலவி வரும் போர்ச் சூழலில், ரஷ்யாவிடமிருந்து ஈரானுக்கு இராணுவ அல்லது புலனாய்வு உதவிகள் கிடைப்பதாக வெளியாகும் செய்திகளை ரஷ்யாவுக்கான ஈரானிய தூதுவர் காசிம் ஜலாலி திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
ஈரானுக்கு ரஷ்யா உளவுத் தகவல்களை வழங்குவதாகக் கூறப்படுவதில் உண்மையில்லை என்றும், இதனை மேற்குலக நாடுகளே ஒப்புக்கொண்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், ரஷ்யாவுடன் தற்போது நடைமுறையில் உள்ள ஒப்பந்தங்கள் அனைத்தும் போருக்கு முன்னரே கையெழுத்திடப்பட்டவை என்றும், அவற்றுக்கும் தற்போதைய மோதலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
ஹோர்முஸ் கப்பல் போக்குவரத்து
இதேவேளை, உலக நாடுகளின் கவனத்தைப் பெற்றுள்ள ஹோர்முஸ் நீரிணை ஊடான போக்குவரத்து குறித்துப் பேசிய அவர், அந்த நீர்ப்பரப்பு இப்போது ஒரு புதிய சட்ட முறைமையின் கீழ் நிர்வகிக்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் ஹோர்முஸ் நீரிணையின் புதிய சட்ட விதிகளுக்கு உட்பட்டு கப்பல்கள் பாதுகாப்பாகப் பயணிக்க ஈரான் அனுமதிக்கும் என அவர் உறுதியளித்துள்ளார்.
எனினும், கப்பல்கள் கடந்து செல்வதற்கான கட்டண விபரங்கள் குறித்துப் பேச மறுத்த அவர், இது தொடர்பான பல்வேறு மாற்றுத் திட்டங்களை ஈரானிய நாடாளுமன்றம் தற்போது உருவாக்கி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய – ஈரான் உடன்படிக்கைகள்
அத்தோடு, தற்போதைய போர்ச் சூழலால் ரஷ்யாவுக்கும் ஈரானுக்கும் இடையிலான உயர்மட்ட ஆலோசனைகள் எவ்விதத்திலும் பாதிக்கப்படவில்லை என்றும் தூதுவர் ஜலாலி குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்ட்-அஸ்தாரா தொடருந்து திட்டம் மற்றும் அணுசக்தி ஒத்துழைப்பு உடன்படிக்கைகள் போன்ற இரு நாடுகளுக்கும் இடையிலான முக்கிய உட்கட்டமைப்புத் திட்டங்கள், இந்த யுத்தத்தினால் சற்று தாமதமடைந்துள்ளதே தவிர, அவை கைவிடப்படவில்லை என்றும் அவர் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.
‘
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

