Last Updated:
பிசிசிஐ-யின் ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் மைதானத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போதும், இந்த விதிமீறல் எப்படி நடந்தது?
போட்டியின் போது செல்போன் பயன்படுத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் மேலாளர் தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளார். அவர் 48 மணி நேரத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என பிசிசிஐ உத்தரவிட்டுள்ளது.
ஐபிஎல் போட்டிகளின் போது வீரர்களும், அணி நிர்வாகிகளும் தங்களது ஓய்வறையிலும் மற்றும் மைதானத்தில் உள்ள ‘டக் அவுட்’ பகுதியிலும் மொபைல் போன் அல்லது எந்தவொரு தகவல் தொடர்பு சாதனங்களையும் பயன்படுத்தக் கூடாது என்பது பிசிசிஐ-யின் கடுமையான விதியாகும். இது போட்டியில் சூதாட்டம் அல்லது முறைகேடுகள் நடப்பதைத் தவிர்க்க அமல்படுத்தப்படும் ‘ஊழல் தடுப்பு விதிமுறை’ ஆகும்.
இந்த நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் மேலாளர் ரோமி பிந்தர், போட்டி நடந்து கொண்டிருந்த சமயத்தில் டக் அவுட் பகுதியில் அமர்ந்து மொபைல் போன் பயன்படுத்தியது கேமராக்களில் சிக்கியது. இது ஐபிஎல் விதிமுறைகளின்படி மிகப்பெரிய குற்றமாகக் கருதப்படுகிறது.
கடந்த வெள்ளி அன்று கவுகாத்தியில் நடைபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணிகளுக்கு இடையிலான விறுவிறுப்பான போட்டியின் போது இந்த விதிமீறல் நடந்துள்ளது.
இந்த விவகாரத்தை மிகத் தீவிரமாக எடுத்துக் கொண்ட பிசிசிஐ, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மேலாளருக்கு உடனடி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், டக் அவுட் பகுதியில் மொபைல் போன் பயன்படுத்தியது ஏன் என்பது குறித்து 48 மணி நேரத்திற்குள் முறையான விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
பிசிசிஐ-யின் ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் மைதானத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போதும், இந்த விதிமீறல் எப்படி நடந்தது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
அணி மேலாளர் அளிக்கும் விளக்கம் திருப்திகரமாக இல்லையெனில், அவருக்கு அபராதம் விதிக்கப்படலாம் அல்லது சில போட்டிகளில் பங்கேற்கத் தடை விதிக்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.


