Last Updated:
சொந்த மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் மும்பை அணி போராடித் தோற்றது அதன் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2026-ன் 20-வது லீக் போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய பெங்களூரு அணிக்குத் தொடக்கமே அதிரடியாக அமைந்தது. தொடக்க வீரர் பிலிப் சால்ட் 36 பந்துகளில் 78 ரன்கள் குவித்தார். அவருக்குத் துணையாக விராட் கோலி பொறுப்புடன் விளையாடி 50 ரன்கள் சேர்த்தார்.
இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 120 ரன்கள் குவித்து வலுவான அடித்தளம் அமைத்தது. அதன்பின் வந்த கேப்டன் ரஜத் பாட்டிதார் வெறும் 20 பந்துகளில் 53 ரன்கள் விளாசி ஸ்கோரை உயர்த்தினார்.
இறுதியில் டிம் டேவிட் அதிரடியால் ஆர்சிபி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 240 ரன்கள் என்ற இமாலய இலக்கை எட்டியது. மும்பை தரப்பில் ஹர்திக் பாண்டியா மற்றும் சாண்ட்னர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
241 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணிக்குத் தொடக்கம் நம்பிக்கையளிக்கும் விதமாக இருந்தது. தொடக்க வீரர் ரையான் ரிக்கெல்டன் 37 ரன்கள் எடுத்தார். நட்சத்திர வீரர் ரோகித் சர்மா 19 ரன்கள் எடுத்திருந்தபோது காயம் காரணமாக பாதியிலேயே வெளியேறியது மும்பை அணிக்குப் பின்னடைவை ஏற்படுத்தியது.
அதன் பின் வந்த சூர்யகுமார் யாதவ் 33 ரன்களும், ஹர்திக் பாண்டியா 40 ரன்களும் எடுத்து ஓரளவிற்குப் போராடினர். திலக் வர்மா 1 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்த நிலையில், கடைசி நேரத்தில் ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட் அதிரடியில் மிரட்டினார்.
அவர் வெறும் 31 பந்துகளில் 71 ரன்கள் குவித்து கடைசி வரை போராடினார். மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 222 ரன்கள் மட்டுமே எடுத்துத் தோல்வியைத் தழுவியது. ஆர்சிபி தரப்பில் சுயாஷ் சர்மா 2 விக்கெட்டுகளையும், குர்ணால் பாண்டியா மற்றும் ஜேக்கப் டஃபி தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
சொந்த மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் மும்பை அணி போராடித் தோற்றது அதன் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.
Apr 13, 2026 12:11 AM IST


