Last Updated:
ஏப்ரல் 16 முதல் 18 வரை மகளிர் இடஒதுக்கீடு மசோதா தொடர்பாக சிறப்பு நாடாளுமன்ற கூட்டம், இது தேர்தல் விதி மீறல் என மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு.
வரும் 16-ஆம் தேதி நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரை நடத்துவது தேர்தல் நடத்தை விதிகளை மீறும் செயல் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம்சாட்டியுள்ளார்.
மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றும் வகையில், வரும் 16-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, எதிர்க்கட்சிகளை கலந்தாலோசிக்காமல் இந்தச் சிறப்புக் கூட்டத் தொடர் நடத்தப்படுவதோடு, தொகுதி மறுவரையறை குறித்த எந்த விவரங்களையும் வெளியிடாமல் மத்திய அரசு மீண்டும் தங்களது ஒத்துழைப்பை நாடுவதாக குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அரசியல் கட்சிகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறுவது உண்மைக்கு முரணானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 16-க்குப் பதிலாக தேர்தல் முடிந்த பிறகு, ஏப்ரல் 29-ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி விவாதிக்கலாம் என்று தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் நேரத்தில் அவசர அவசரமாக மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை செயல்படுத்த இந்த அரசு முனைப்புக் காட்டுவது அரசியல் ஆதாயம் தேடும் முயற்சி என அவர் கூறியுள்ளார்.
இதனிடையே, நாடாளுமன்றச் சிறப்புத் தொடரில் பாஜக மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்.பி.க்கள் தவறாமல் கலந்து கொள்ளுமாறு பாஜக கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும், மத்திய அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்களின் வருகை கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.


