கனடாவில் வேலைவாய்ப்பு பெற்று தருவதாகக் கூறி பண மோசடி செய்த மூன்று சந்தேக நபர்கள்
கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கனடாவில் உள்ள ஒரு நிறுவனத்துடன் தங்களுக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் நபர்களிடமிருந்து சுமார் 3 கோடி ரூபாயை சந்தேகநபர்கள் மோசடி செய்தது தொடர்பாக பணியகத்திற்கு 9 புகார்கள் வந்துள்ளன.
நீதிமன்றத்தில் முன்னிலை
சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இந்த மோசடியில் ஈடுபட்ட ஒரு சந்தேக நபர் கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டதன் பின்னரே அவர் அந்தப் பணத்தை மற்ற நபர்களின் கணக்குகளுக்கு வரவு வைத்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதன்படி, சம்பந்தப்பட்ட மற்ற இரண்டு சந்தேக நபர்களும் ஏப்ரல் 8 மற்றும் 9 ஆகிய திகதிகளில் புலனாய்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவ்விரு சந்தேக நபர்களும் நேற்று (09.04.2026) கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு சந்தேக நபர்களை பிணையில் செல்ல நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
வெளிநாட்டு வேலை தேடுபவர்கள்
இந்நிலையில் உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகமைகள் அல்லாத வெளியாட்களுக்குப் பணமோ அல்லது கடவுச்சீட்டுகளோ கொடுப்பதைத் தவிர்க்குமாறு வெளிநாட்டு வேலை தேடுபவர்களைப் பணியகம் கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும், வெளிநாட்டு வேலைவாய்ப்பை வழங்குவதற்காக ஒருவருக்குப் பணம் கொடுப்பதற்கு முன்பு, 1989 என்ற எண்ணைத் தொடர்புகொண்டு அது குறித்துப் பணியகத்திடம் விசாரிக்குமாறும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

