“இரண்டு வாரங்களுக்கு ஈரான் போர் நிறுத்தப்படுகிறது”‘ என்ற செய்தியறிந்து உலக நாடுகள் நிம்மதிப் பெருமூச்சுவிட்டு முடிப்பதற்குள், லெபனான் தலைநகர் பெய்ரூட்டைச் சுடுகாடாக்கும் வேலையில் இறங்கியிருக்கிறார் இஸ்ரேல் அதிபர் நெதன்யாகு.
பெய்ரூட்டில் இஸ்ரேல் ராணுவம் பொழியும் குண்டு மழை, மீண்டும் மத்திய கிழக்கில் பெரும் போரைத் தொடங்கிவிடும் அபாயத்தை உண்டாக்கியிருக்கிறது!
கடந்த பிப்ரவரி 28-ம் தேதி ஈரானில், இஸ்ரேல், அமெரிக்கக் கூட்டுப்படைகள் நடத்திய தாக்குதலால், மத்திய கிழக்கில் தொடங்கிய போர் சுமார் 40 நாள்கள் நீடித்தன.
பாகிஸ்தானின் தலையீட்டால், கடந்த ஏப்ரல் 7-ம் தேதி இந்தப் போர் இரண்டு வாரங்களுக்கு நிறுத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், “லெபனான் உள்பட அனைத்து நாடுகளிலும் தாக்குதல்கள் நிறுத்தப்படும். இஸ்லாமாபாத்தில் அமெரிக்கா, ஈரான் நாடுகளின் தூதுக்குழுக்கள் பேச்சுவார்த்தை நடத்தும்” என்று குறிப்பிட்டிருந்தார்.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பும் தாக்குதல்கள் இரண்டு வாரம் நிறுத்த ஒப்புக்கொண்டார். இஸ்ரேலும் இந்த ஒப்பந்தத்தை வரவேற்பதாகச் சொல்லிவிட்டு, லெபனானில் தாக்குதலைத் தீவிரப்படுத்தியது.
லெபனான் – இஸ்ரேல் இடையேயான மோதல் இன்று, நேற்று தொடங்கியதல்ல… ஏழு தசாப்தங்களுக்கு முன்னர் 1948-ம் ஆண்டு, அரபு நாடுகள் – இஸ்ரேல் படைகளுக்கிடையே நடந்த போரிலேயே இரு நாடுகளுக்கும் பகை தொடங்கியிருந்தது.
பாலஸ்தீனத்தின் ஒரு பகுதியை யூதர்களுக்கு வழங்கும் பிரிட்டனின் முயற்சிக்கு எதிராக அரபு நாடுகள் நடத்திய போரில் லெபனான் நாட்டு வீரர்களும் தங்களை இணைத்துக் கொண்டனர். இந்தப் போரில் வென்ற இஸ்ரேல், வெற்றிகரமாகத் தனி நாடானது.
1978-ல், லெபனானில் பதுங்கியிருக்கும் `பாலஸ்தீன விடுதலை அமைப்பின்’ தலைவர்களை ஒழித்துக்கட்டுவதாகச் சொல்லி, அந்த நாட்டின்மீது படையெடுத்தது இஸ்ரேல். பின்னர், 1982-லும் லெபனான்மீது படையெடுத்து, சில இடங்களை ஆக்கிரமித்தது இஸ்ரேல்.
இந்த ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக ஈரானின் ஆதரவோடு லெபனானில் உருவானது `ஹிஸ்புல்லா’ புரட்சிப்படை. இதையடுத்து, இஸ்ரேல் – ஹிஸ்புல்லாவுக்கு இடையே அவ்வப்போது தாக்குதல்கள் நடைபெறுவது வழக்கமானது.
