மட்டக்களப்பில் கடற்றொழிலாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுச் சித்திரவதைக்குட்படுத்தப்பட்டுள்ளதாக முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு செட்டிபாளையம் கடற்கரையில் அனுமதியற்ற மீன்பிடி வலையைப் பாவித்துக் கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்டவர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவரே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழுவிடம் இன்று (08-04-2026) முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.
கடற்றொழில் நடவடிக்கை
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை (05) காலையில் செட்டிபாளையம் கடலில் கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த கடற்றொழிலாளர் நந்தீசன், அனுமதியற்ற மீன்பிடி வலைக்குப் பாவிக்கும் ஈயத் துண்டுகளை வைத்துக்கொண்டிருந்த போது கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த இடத்திற்குச் சிவில் உடையில் சென்ற கல்லடி கடற்படை முகாமின் புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரி தலைமையில் ஐந்து பேர் கொண்ட குழுவினர் இந்த கைது நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

இதன்போது கடற்றொழிலாளர், நான் அனுமதியற்ற மீன்பிடி வலையான சுருக்குவலை பாவித்துப் மீன்பிடிக்கும் குற்றத்தை ஒப்புக்கொள்கிறேன் எனக் கூறி அங்கிருந்த வலையை அவர்களிடம் ஒப்படைத்துள்ளார்.
இந்த நிலையில் குறித்த கடற்றொழிலாளரைப் பிடித்து இரண்டு மணித்தியாலம் முழங்காலில் இருக்க வைத்து அடித்துத் தாக்கியுள்ளனர்.
தகாத வார்த்தை
இதன்போது அவர், நான் ஒரு சர்க்கரை வியாதி நோயாளி, அதற்கான குளிகையைப் போடுவதற்கு விடுமாறு கோரியும் அவர்கள் அதற்கு அனுமதி வழங்காது அவரை இரண்டு மணித்தியாலம் முழங்காலில் வைத்துள்ளனர்.
இதனை அறிந்த அவரது மனைவி அங்கு சென்று தனது கணவரை முழங்காலில் வைத்து அடித்துச் சித்திரவதை செய்வதைக் கண்டு உடன் அதனைத் தனது கையடக்கத் தொலைபேசியில் புகைப்படம் மற்றும் காணொளிப் பதிவைச் செய்துள்ளார்.

இதனைக் கண்ட கடற்படைப் புலனாய்வுப் பிரிவினர் குறித்த பெண்ணின் கையடக்கத் தொலைபேசியைப் பறித்து அவர் காணொளி செய்த காட்சிகளை அழித்ததுடன் அவருக்குத் தகாத வார்த்தைகளால் பேசியும் அவரைக் கைது செய்யப்போவதாக மிரட்டி அவரைத் தாக்க முற்பட்டு அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து முழங்காலில் வைத்திருந்த கடற்றொழிலாளரைக் களுதாவளை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்று அங்கு வைத்திருந்த பின்னர், மட்டக்களப்பு கடற்றொழில் நீரியல் வளத்துறைப் பணிப்பாளர் காரியாலய அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.
புலனாய்வுப் பிரிவி
இந்தநிலையில், கடற்படைப் புலனாய்வுப் பிரிவினரின் தாக்குதலுக்கு உள்ளான கடற்றொழிலாளர் மிகவும் மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, தன்னை முழங்காலில் வைத்திருந்த காட்சியைத் தனது பிள்ளைகள் மற்றும் அந்தப் பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் வேடிக்கை பார்த்திருந்ததாகவும் அதனால் மிகவும் வேதனையடைந்துள்ளதுடன் அவமானம் ஏற்பட்டுள்ளதாகவும் பிள்ளைகள் அவமானத்தால் பாடசாலைக்குச் செல்ல முடியாது என்ற நிலை உருவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நான் மட்டும் இந்தச் சுருக்குவலை பாவித்துப் மீன்பிடிக்கவில்லை, சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்தச் சுருக்குவலை பாவித்துப் மீன்பிடித்து வருகின்ற நிலையில் என்னை மட்டும் கைது செய்தது மட்டுமல்லாது முழங்காலில் இருக்க வைத்து அடித்துச் சித்திரவதை செய்துள்ளனர் எனக்கு நீதி வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரி முறைப்பாடு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

