
சரவணன்
முல்லைத்தீவு – கேப்பாப்பிலவு பகுதியில் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள மக்களின் பூர்வீகக் காணிகளை விடுவிப்பது தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனுக்கும் இடையில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
செவ்வாய்க்கிழமை 07 கொழும்பில் நடைபெற்ற பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைக் கூட்டத்தின் போதே ரவிகரன் இந்த கோரிக்கையை முன்வைத்தார்.
1818ஆம் ஆண்டு முதல் மக்கள் வாழ்ந்த வரலாற்றைக் கொண்ட 59.9 ஏக்கர் பூர்வீகக் காணிகள் இன்னும் இராணுவத்தின் வசமே உள்ளன. இதில் 55 குடும்பங்களுக்குச் சொந்தமான தென்னை மற்றும் பயிர்ச்செய்கை நிலங்கள் அடங்குகின்றன.
இந்தக் காணிகள் நந்திக்கடல் களப்புக்கு அருகில் அமைந்துள்ளதால், மக்களின் மீன்பிடி மற்றும் விவசாய வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக ரவிகரன் சுட்டிக்காட்டினார்.
கேப்பாப்பிலவு காணி விடுவிப்புத் தொடர்பாக இராணுவத் தரப்புடன் மிக விரைவில் விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்தவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
குறித்த ஆலோசனையின் பின்னரே காணி விடுவிப்பு தொடர்பான இறுதி முடிவு அறிவிக்கப்படும் என அவர் உறுதியளித்தார்.
கடந்த காலங்களில் வழங்கப்பட்ட மாற்றுக்காணிகள் தற்காலிகமானவை என்றும், இராணுவம் வெளியேறியதும் மக்கள் தமது சொந்த இடங்களுக்குத் திரும்பலாம் என அரச அதிகாரிகளால் வாக்குறுதி அளிக்கப்பட்டதையும் ரவிகரன் இதன்போது சுட்டிக்காட்டினார். சுமார் 11 குடும்பங்களுக்கு இதுவரை எந்த மாற்றுக்காணிகளும் வழங்கப்படவில்லை என்பதையும் இதன்போது நினைவுகூர்ந்தார்.
கேப்பாப்பிலவு மக்கள் தமது காணிகள் விடுவிக்கப்படும் என்ற நம்பிக்கையில் தொடர் போராட்டங்களைக் கைவிட்டுப் புதிய அரசாங்கத்தின் பதிலை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் இதன்போது ஜனாதிபதியிடம் வலியுறுத்தினார்.

