Last Updated:
151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களம் இறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது.
ஐபிஎல் 2026 தொடரின் 13-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் கவுகாத்தியில் உள்ள பார்சபாரா மைதானத்தில் மோதின. மழை குறுக்கிட்ட காரணத்தால் இந்தப் போட்டி தலா 11 ஓவர்கள் கொண்ட ஆட்டமாக குறைக்கப்பட்டது.
இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் அதிரடி ஆட்டத்தால் நிர்ணயிக்கப்பட்ட 11 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் என்ற இமாலய இலக்கை எட்டியது. ஜெய்ஸ்வால் 32 பந்துகளில் 10 பவுண்டரி மற்றும் 4 சிக்சர்களுடன் 77 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
அவருக்கு உறுதுணையாக ஆடிய வைபவ் சூர்யவன்ஷி 14 பந்துகளில் 39 ரன்கள் விளாசினார். மும்பை தரப்பில் கசன்ஃபர் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஜஸ்பிரித் பும்ரா 3 ஓவர்களில் 32 ரன்கள் விட்டுக்கொடுத்து ராஜஸ்தானின் ரன் குவிப்பை கட்டுப்படுத்தினார்.
அதைத் தொடர்ந்து 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களம் இறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. ரயான் ரிக்கெல்டன் 8 ரன்னிலும், சூர்யகுமார் யாதவ் 6 ரன்னிலும், ரோகித் சர்மா 5 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
கேப்டன் ஹர்திக் பாண்டியா 9 ரன்களில் வெளியேறினார். நமன் திர் மற்றும் ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட் ஆகியோர் அதிரடியாக ஆடி தலா 25 ரன்கள் சேர்த்தனர். 11 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த மும்பை அணி 123 ரன்கள் எடுத்து 27 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
Apr 08, 2026 12:48 AM IST


