Last Updated:
உத்தர பிரதேச வாரணாசியில் கங்கை நதியில் படகில் மது பார்ட்டி நடத்திய வீடியோ வெளியாகி சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேசத்தில் கங்கை நதியில் சென்றவாறு படகில் மது விருந்துடன் ஆட்டம் பாட்டத்துடன் கும்மாளம் போட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் தேசிய நதியாக அறிவிக்கப்பட்ட கங்கை, இந்துக்களின் புனித நதியாக கருதப்படுகிறது. இந்தியாவின் மிக நீளமான நதியான இது, இமயமலையில் உள்ள கங்கோத்ரி பனிப்பாறையில் உற்பத்தியாகி, சுமார் 2 ஆயிரத்து 525 கிலோ மீட்டர் தூரம் பாய்ந்து வங்காள விரிகுடாவில் கலக்கிறது.
பாவம் போக்கும் புனித நதியாகவும் கருதப்படும் கங்கையில் ஹரித்வார், வாரணாசி, அலகாபாத் போன்ற நகரங்களில் மக்கள் நீராடி வழிபடுகின்றனர். இந்த நிலையில் வாரணாசியில் உள்ள கங்கை நதியில் பக்தர்கள் சிலர் படகில் சென்று சாமி தரிசனம் செய்துள்ளனர்.
கூட்டமாக வந்த பக்தர்களில் சிலர் இரவிலும் படகில் உற்சாகமாக பயணம் மேற்கொண்டுள்ளனர். அப்போது எல்லை மீறியவர்கள் படகையே கேளிக்கை விடுதியாக மாற்றியுள்ளனர். தொடர்ந்து மதுபாட்டிலுடன் குடித்துவிட்டு கத்தி கூப்பாடு போட்டுள்ளனர். வேத மந்திரங்கள் ஓதும் இடத்தில் இருந்து கொண்டு, DJ மூலம் எடக்கு மடக்கான பாடல்களை கதறவிட்டு குத்தாட்டம் போட்டுள்ளனர்.
இருக்கும் இடம் தெரியாமல் தொடர்ந்து நள்ளிரவு நேரத்தில் குடியும், கும்மாளமுமாக கூத்தடித்துள்ளனர். இந்த அக்கப்போரை சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். அந்த வீடியோவை பார்த்த பக்தர்கள் கொந்தளித்துள்ளனர்.
பாவம் போக்கும் புண்ணிய நதியாக கருதப்படும் கங்கையில், அதன் புனிதத்தை கெடுக்கும் வகையில் பார்ட்டி கொண்டாடியதற்கு கண்டனக் குரல் வலுத்துள்ளது. மத நம்பிக்கையை கெடுக்கும் வகையில் வாரணாசியில் ஆட்டம் போட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பான வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் ‘மஞ்சி’ சமூகத்தினர் நடத்திய ஒரு மத ரீதியிலான ஊர்வலத்தின் போது இந்த சம்பவம் நிகழ்ந்தது தெரியவந்தது.
எனவே, அதில் பங்கேற்றவர்களை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். எதிர்காலத்தில் கங்கை நதியின் புனிதத்தை கெடுக்கும் வகையில் இதுபோன்று அத்துமீறலில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


