Last Updated:
David Warner | மரோப்ராவில் நடத்தப்பட்ட மூச்சுப் பரிசோதனையில், சட்ட வரம்பை விட இரண்டு மடங்குக்கும் அதிகமான மதுவின் அளவு அவரிடம் இருந்ததாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் மது அருந்திவிட்டு குடிபோதையில் வாகனம் ஓட்டியதற்காக சிட்னி போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரராக களமிறங்கி அதிரடியாக ரன்களை குவிப்பவர் டேவிட் வார்னர். டேவிட் வார்னர் 2024 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ஐபிஎல் தொடரில் விளையாடிய இவர் சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாக இருந்து கோப்பையை வென்று தந்தவர். டேவிட் வார்னர் பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் விளையாடி வருகிறார்.
இதனிடையே மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதற்காக டேவிட் வார்னர் சிட்னியில் கைது செய்யப்பட்டுள்ளார். மரோப்ராவில் நடத்தப்பட்ட மூச்சுப் பரிசோதனையில், சட்ட வரம்பை விட இரண்டு மடங்குக்கும் அதிகமான மதுவின் அளவு அவரிடம் இருந்ததாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
NSW காவல்துறையின் படி, வார்னர் சோதனைச் சாவடிக்குச் சற்று முன்பு தனது வாகனத்தை நிறுத்த முயன்றார். சந்தேகம் கொண்ட காவல்துறை அதிகாரிகள் அவரை அணுகி சோதனையிட்டபோது, அவர் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது. பின்னர் வார்னர் கைது செய்யப்பட்டு மரோப்ரா காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு நடத்தப்பட்ட சோதனையில், அவரது இரத்த அணுக்களின் எண்ணிக்கை 0.1 எனத் தெரியவந்தது. அவர் மே மாதம் நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளார்.
டேவிட் வார்னர் 2024-ல் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். 2024 ஜனவரியில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு வெறும் நான்கு வாரங்களுக்கு முன்பு வார்னர் தனது ஓய்வை அறிவித்த முடிவு, அப்போது தேர்வாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பாகிஸ்தானுக்கு எதிரான சிட்னி டெஸ்ட் போட்டியே அவரது கடைசி டெஸ்ட் போட்டியாகும். 2024-க்குப் பிறகு தனது ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடுவதில் தனக்கு விருப்பமில்லை என்றும், உலகளாவிய டி20 லீக்குகளில் கவனம் செலுத்தப் போவதாகவும் அவர் கூறியிருந்தார்.


