
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 23-ஆம் திகதி நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் என நான்கு முனைப் போட்டி நிலவுகிறது. வேட்பாளர்கள் வீதி வீதியாகச் சென்று தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில், கட்சித் தலைவர்களும் முக்கிய நிர்வாகிகளும் தமிழகம் முழுவதும் சூறாவளிப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
முக்கியத் தலைவர்கள் மனுத்தாக்கல்:
சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 30-ஆம் திகதி தொடங்கியது. முதல் நாளன்றே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (கொளத்தூர்), த.வெ.க. தலைவர் விஜய் (பெரம்பூர்), நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் (காரைக்குடி) ஆகியோர் தங்கள் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனர்.
வேட்புமனுத் தாக்கல் இன்றுடன் நிறைவடையும் நிலையில், கடைசி நாளான இன்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (எடப்பாடி), தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் (விருத்தாசலம்), தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை (ஸ்ரீபெரும்புதூர்) உள்ளிட்டோர் மனுத்தாக்கல் செய்தனர். இவர்களுடன் காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா வேட்பாளர்களும் இன்று திரளாக மனுத்தாக்கல் செய்தனர்.
முக்கிய வேட்பாளர்கள் விபரம்:
எடப்பாடி பழனிசாமி: சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் எடப்பாடி பழனிசாமி மனுத்தாக்கல் செய்தார். இவர் இத்தொகுதியில் 8-வது முறையாகப் போட்டியிடுகிறார். இதற்கு முன் 1989, 1991, 2011, 2016 மற்றும் 2021 தேர்தல்களில் இதே தொகுதியில் அவர் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வானதி சீனிவாசன்: கோவை வடக்குத் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக வானதி சீனிவாசன் மனுத்தாக்கல் செய்தார். அப்போது ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மா, பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை ஆகியோர் உடனிருந்தனர்.
நயினார் நாகேந்திரன்: சாத்தூர் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் அக்கட்சியின் மூத்த தலைவர் நயினார் நாகேந்திரன் மனுத்தாக்கல் செய்தார். மத்திய மந்திரி அர்ஜுன் ராம் மேக்வால் இதன்போது உடனிருந்தார்.
தமிழிசை சவுந்தரராஜன்: மயிலாப்பூர் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய மந்திரி பியூஷ் கோயல் முன்னிலையில் மனுத்தாக்கல் செய்தார்.
எல்.முருகன்: அவிநாசி தொகுதியில் போட்டியிடும் மத்திய இணை மந்திரி எல்.முருகன், அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் வழிபாடு செய்த பின் மனுத்தாக்கல் செய்தார். மத்திய மந்திரி கிஷன் ரெட்டி உடனிருந்தார்.
ஓ.பன்னீர்செல்வம்: தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பில் (தி.மு.க சின்னத்தில்) முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வேட்புமனுத் தாக்கல் செய்தார்.
பிற முக்கிய வேட்பாளர்கள்:
மதுரை தெற்கு தொகுதியில் பா.ஜ.க.வின் ராம சீனிவாசனும், ம.தி.மு.க.வின் பூமிநாதனும் மனுத்தாக்கல் செய்தனர். காட்பாடியில் தி.மு.க.வின் துரைமுருகன் 13-வது முறையாகக் களம் காண்கிறார். அமைச்சர்கள் சேகர்பாபு (துறைமுகம்), காந்தி (ராணிப்பேட்டை), சிவசங்கர் (குன்னம்) ஆகியோரும் இன்று மனுத்தாக்கல் செய்தனர். தர்மபுரியில் பா.மக. சார்பில் சவுமியா அன்புமணி ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் ஊர்வலமாகச் சென்று மனுத்தாக்கல் செய்தார்.
அடுத்தகட்ட நடவடிக்கைகள்:
இன்று கடைசி நாள் என்பதால் தேர்தல் அலுவலகங்களில் வேட்பாளர்கள் கூட்டம் அலைமோதியது. கூட்ட நெரிசலைத் தவிர்க்க ‘டோக்கன்’ முறை பின்பற்றப்பட்டது. தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான பரிசீலனை நாளை (ஏப்ரல் 7) நடைபெறுகிறது. விதிமுறைகளுக்குப் புறம்பான மனுக்கள் நிராகரிக்கப்படும்.
வேட்புமனுக்களைத் திரும்பப் பெற ஏப்ரல் 9-ஆம் திகதி கடைசி நாளாகும். அன்றைய தினம் மாலை, தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.

