- அந்த விமானத்தில் இரண்டு பேர் இருந்தார்கள். ஒருவர் பைலட், மற்றொருவர் வெப்பன் சிஸ்டம் ஆபீசர் (WSO).
விமானம் நொறுங்கிய சில மணி நேரங்களிலேயே பைலட் மீட்கப்பட்டார். ஆனால், இரண்டாவது வீரரான அந்த ‘கர்னல்’ எங்கே என்பது மர்மமாக இருந்தது. ஈரானின் கரடுமுரடான மலைப்பகுதிகளில் அந்த அமெரிக்க கர்னல் பாராசூட் மூலம் குதித்துத் தலைமறைவானார். அவரைப் பிடிக்க உதவுவோருக்கு ஈரான் அரசு 66,000 டாலர் சன்மானம் அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 60 லட்ச ரூபாயை அறிவித்தது. இதையடுத்து ஈரானியப் பழங்குடியினர் துப்பாக்கிகளுடன் மலைகளில் அவரைத் தேடி அலைந்த வீடியோக்கள் இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அதேபோல ஈரானின் படைகளும் அமெரிக்க வீரரை அணுஅணுவாக தேடத் தொடங்கின. ஆனால், அமெரிக்கா அமைதியாக ஒரு மிகப்பெரிய திட்டத்தைத் தீட்டிக் கொண்டிருந்தது.
போர் தொடங்கியதிலிருந்து ஈரான் சுட்டு வீழ்த்திய இரண்டாவது F-35 விமானம்
இந்த விவகராத்தில் உள்ள புகுந்தது அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான சிஐஏ. ஈரானுக்குள் கீழே விழுந்த வீரர் பத்திரமாக மீட்கப்பட்டதாகக் கூறி, ஒரு செய்தியை பரப்பி, ஈரான் ராணுவத்தையும், மக்களையும் மட்டுமல்லாமல் உலகத்தையே திசைதிருப்பியது. இதனால் ஈரான் ராணுவம் குழம்பிபோனது. உண்மையில் அந்த கர்னல் தனியாக குஜிஸ்தான் மலைகளில் பதுங்கியிருந்தார்.
அவர் தனது கம்யூனிகேஷன் சிஸ்டம் மூலம் ரகசியமாக அமெரிக்க ராணுவ தலைமையகத்தைத் தொடர்புகொண்டார். வெள்ளை மாளிகை, பென்டகன் மற்றும் தளபதிகள் 24 மணி நேரமும் அவரது இருப்பிடத்தைக் கண்காணித்து வந்தனர். கடைசியில் சனிக்கிழமை இரவு அந்த ‘மெகா ஆபரேஷன்’ தொடங்கியது. தனது ராணுவ வீரரை மீட்க ஒரு பெரும் படையையே களத்தில் இறக்கியது அமெரிக்கா.
- இரு HH-60W Jolly Green II ஹெலிகாப்டர்கள்
- வான்வழி பாதுகாப்புக்கான A-10 ‘வார்தாக்’ (Warthog) விமானங்கள்
- F-35 ‘ஸ்டெல்த்’ விமானங்கள் (Stealth Jets)
- HC-130 ‘காம்பாட் கிங் II’ (Combat King II) எரிபொருள் விமானம்
என நவீன ஹெலிகாப்டர்கள் மற்றும் விமானங்களுடன், ஆயிரக்கணக்கான வீரர்களும் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த மீட்புப் பணியில் முக்கிய பங்காற்றியது ‘The Beast’ என செல்ல பெயர் கொண்ட HH-60W Jolly Green II ஹெலிகாப்டர். இது பழைய பிளாக் ஹாக் ஹெலிகாப்டர்களை விட அதிக தூரம் பறக்கக்கூடியது. எதிரிகளின் குண்டுகள், எரிபொருள் டாங்கிகளை துளைத்தாலும், அவை தாமாகவே மூடிக்கொள்ளும் (Self-sealing fuel tanks) திறன் கொண்டவை. மலைப்பகுதிகளில் பதுங்கியிருந்த கர்னலை, ஈரான் ராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டிற்கு நடுவே கயிறு மூலம் மேலே தூக்க (Powerful Hoist) இந்த ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டது. இதன் கதவுகளில் பொருத்தப்பட்டிருந்த மெஷின் கன்கள் தரையில் இருந்த எதிரிகளைச் சுட்டு வீழ்த்தி ஹெலிகாப்டருக்குப் பாதுகாப்பு அளித்தன.
ஈரான் – இஸ்ரேல் போர்
மீட்பு ஹெலிகாப்டர் தரையில் இறங்கும்போது, ஈரானியத் தரைப்படை மற்றும் கவச வாகனங்கள் தடுத்துவிடக் கூடாது என்பதற்காக A-10 ‘வார்தாக்’ (Warthog) விமானம் வான்வழிப் பாதுகாப்பை அளித்தது. இந்த விமானத்தின் முன் பகுதியில் இருக்கும் GAU-8 Avenger என்ற ராட்சதத் துப்பாக்கி ஒரு நிமிடத்திற்கு 4,000 குண்டுகளைச் சுடும். ஈரான் ராணுவம் அமெரிக்க வீரர் பதுங்கியிருந்த இடத்தை நெருங்காதபடி, வான்வெளியிலிருந்து குண்டுமழை பொழிந்து ஒரு பாதுகாப்பு வளையத்தை (Close Air Support) இந்த விமானங்கள் உருவாக்கின.
அதேநேரத்தில், F-35 ‘ஸ்டெல்த்’ விமானங்கள் நேரடியாகச் சண்டையில் ஈடுபடாமல், ஈரானின் ரேடார் அமைப்புகள் எப்போது செயல்படுகின்றன, ஏவுகணைகள் எங்கிருந்து வருகின்றன என்பதைக் கண்காணித்து மீட்புக் குழுவிற்குத் தகவல்களை வழங்கின. சண்டை பல மணி நேரங்களை கடந்து கொண்டிருந்த நிலையில், HC-130 ‘காம்பாட் கிங் II விமானம், மீட்பு ஹெலிகாப்டருக்கு தேவையான எரிபொருளை வழங்கிக் கொண்டிருந்தது. இந்த மீட்புப்பணி அமெரிக்கா நினைத்தது போல் எளிதாக முடிந்துவிடவில்லை. மீட்புப் பணி விரிவடைந்த நிலையில் அண்டை மாகாணமான இஸ்ஃபஹானிலும் மோதல்கள் வெடித்தன. அமெரிக்க வீரரை Jolly Green மீட்டுக் கொண்டிருந்த போது, ஈரான் ராணுவம் மிகப்பெரிய தாக்குதலையும் நடத்தியது. ஒரு பக்கம் குண்டுகள் பாய, மறுபக்கம் ஹெலிகாப்டர் அந்த வீரரைத் தூக்கிக்கொண்டு மின்னல் வேகத்தில் பறந்தது.
அமெரிக்கா – ஈரான் போர் பதற்றம்
இப்படிதான் இந்த மீட்பு பணிகள் குறித்து ட்ரூத் சமூகவலைப்பக்கத்தில் பதிவிட்ட அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது பதிவை தொடங்கியிருந்தார். அதில் மீட்கப்பட்ட அதிகாரி ஒரு “கர்னல்” (Colonel) அந்தஸ்து கொண்டவர் என்றும் அவர் ஈரானின் கரடுமுரடான மலைப்பகுதிகளில் எதிரிகளால் துரத்தப்பட்டார் என்பதையும் டிரம்ப் சுட்டிக்காட்டினார். எதிரிகள் அவரை நெருங்கிக்கொண்டிருந்தாலும், அவர் ஒருபோதும் தனித்து விடவில்லை என்றும் தானும் பாதுகாப்புத்துறை அமைச்சர் மற்றும் சக வீரர்கள் 24 மணி நேரமும் அவரது இருப்பிடத்தைக் கண்காணித்து, இந்த மீட்புப் பணியைத் துல்லியமாகத் திட்டமிட்டதாகவும் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மீட்புப் பணியை ஒரு “அதிசயம்” என வர்ணித்துள்ள டிரம்ப், இந்த மீட்புப் பணியில் Most lethal Weapons பயன்படுத்தப்பட்டதாகவும் கூறினார். எதிரி நாட்டு வான் பாதுகாப்பு வளையத்திற்குள் புகுந்து, சனிக்கிழமை ஒரு வீரரையும், ஞாயிற்றுக்கிழமை இந்த கர்னலையும் தனித்தனியாக மீட்டது அமெரிக்க ராணுவ வரலாற்றிலேயே ஒரு மைல்கல் என்றும் பெருமிதம் தெரிவித்தார்.
ஈஸ்டர் தினத்தில் எதிரி நாட்டுக்குள் விழுந்த அமெரிக்கவீரரை மீட்டுள்ளதாக கூறியுள்ள டிரம்ப் இந்தத் தருணத்தை அரசியல் கடந்து அனைத்து அமெரிக்கர்களும் (குடியரசுக் கட்சியினர், ஜனநாயகக் கட்சியினர்) கொண்டாட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். “உலகின் மிகச்சிறந்த மற்றும் தொழில்முறை சார்ந்த ராணுவம் எங்களுடையது” என்று கூறியுள்ள டிரம்ப் தனது பதிவின் இறுதியில் “கடவுள் அமெரிக்காவை ஆசீர்வதிக்கட்டும், அனைவருக்கும் இனிய ஈஸ்டர் வாழ்த்துகள்” என்று பதிவிட்டுள்ளார்.
டிரம்ப் இந்த மீட்பை “மிராக்கிள்” என்று கொண்டாடும் வேளையில், ஈரான் இதனைத் தங்களுக்குக் கிடைத்த ஒரு ராணுவ வெற்றி என்கிறது. ஈரானின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான ‘ஃபார்ஸ்’ (Fars News), டிரம்பின் பதிவை “ஒரு மிகப்பெரிய தோல்வியை மறைக்க நடக்கும் அவநம்பிக்கையான முயற்சி” என்று விமர்சித்துள்ளது. அமெரிக்க வீரரை மீட்க வந்த பல விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஈரான் கூறுகிறது.
ஈரான்
ஈரானின் புரட்சிகர காவற்படை (IRGC) வெளியிட்டுள்ள தகவலில், இஸ்ஃபஹான் (Isfahan) மாகாணத்தில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த அமெரிக்காவின் C-130 ரக ராணுவப் போக்குவரத்து விமானத்தை, ஈரானின் ‘ஃபராஜ் ரேஞ்சர்ஸ்’ (Faraj Rangers) என்ற கமாண்டோ படை சுட்டு வீழ்த்தியதாக தெரிவித்துள்ளது. காணாமல் போன வீரரைத் தேடி வந்த இரண்டு பிளாக் ஹாக் (Blackhawk) ஹெலிகாப்டர்களையும் அழித்துவிட்டதாக ஈரான் ராணுவம் தெரிவித்துள்ளது. ஒரு வயல்வெளியில் கரும்புகை எழும் புகைப்படத்தை வெளியிட்டு, இது அமெரிக்க விமானம் வீழ்ந்த இடம் என்று ஈரான் தனது கூற்றுக்கு வலுசேர்க்கிறது.
ஆச்சர்ய தகவல் சொன்ன நியூயார்க் டைம்ஸ்!
இவற்றுக்கு மத்தியில் நியூயார்க் டைம்ஸ் (NYT) அறிக்கையில் ஓர் ஆச்சரியமான தகவல் இடம்பெற்றுள்ளது. அமெரிக்கப் படைகள் ஆயுத அமைப்பு அதிகாரியை (weapons officer) மீட்ட உடனேயே, அவரையும் கமாண்டோ படையினரையும் பாதுகாப்பாக வெளியேற்றுவதற்காக அனுப்பப்பட்ட இரண்டு போக்குவரத்து விமானங்கள் ஈரானுக்குள் ஒரு தொலைதூர தளத்தில் சிக்கிக்கொண்டதாகவும் அமெரிக்கா உடனடியாக மூன்று புதிய விமானங்களை அனுப்பி, அனைத்து அமெரிக்க இராணுவப் பணியாளர்களையும், மீட்கப்பட்ட வீரரையும் பத்திரமாக வெளியேற்றியதாகவும் தெரிவிக்கிறது. மேலும் ஈரானில் சிக்கிய இரண்டு விமானங்களும் ஈரான் கையில் சிக்கிவிடாமல் இருக்க வெடிக்கச் செய்து அழித்துவிட்டதாகவும் நியூயார்க் டைம்ஸ் தெரிவிக்கிறது.
ஒரு வீரரை மீட்க அமெரிக்கா ஏன் இவ்வளவு முக்கியத்துவம் செலுத்தியது? என்பதற்கு முக்கிய காரணம் வியட்நாம் போர்தான். 1967 ஆம் ஆண்டு வியட்நாம் போர் உச்சத்தில் இருந்த போது அமெரிக்க கடற்படை விமானியான ஜான் மெக்கெய்ன், தனது A-4E Skyhawk போர் விமானத்தில் வடக்கு வியட்நாமின் தலைநகரான ஹனோய் (Hanoi) நகருக்கு மேல் குண்டுவீச்சுத் தாக்குதல் நடத்தச் சென்றார். அப்போது வடக்கு வியட்நாம் படைகள் ஏவிய ஏவுகணையால் அவரது விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. விமானத்திலிருந்து குதிக்கும் போது மெக்கெய்னின் இரண்டு கைகளும், ஒரு காலும் உடைந்தன. அவர் ஹனோய் நகரின் மையப்பகுதியில் இருந்த ஒரு ஏரியில் விழுந்தார். அங்கிருந்த உள்ளூர் மக்கள் மற்றும் படைகளால் அவர் உடனடியாகப் பிடிக்கப்பட்டார்.
A-4E Skyhawk
மெக்கெய்ன் சிறைபிடிக்கப்பட்டு “ஹனோய் ஹில்டன்” (Hanoi Hilton) என்று அழைக்கப்படும் புகழ்பெற்ற ஹோவா லோ (Hoa Lo) சிறையில் அடைக்கப்பட்டார். அமெரிக்க ராணுவ ரகசியங்களைக் கறப்பதற்காக அவர் கடுமையான உடல் ரீதியான சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டார். பல மாதங்கள் அவர் தனிமைச் சிறையில் வைக்கப்பட்டார். மெக்கெய்ன் ஒரு விஐபி (VIP) கைதி என்பதை உணர்ந்த வியட்நாம் படைகள், ஒரு தந்திரத்தைக் கையாண்டன. அமெரிக்காவிடம் நல்ல பெயர் எடுக்கவும், மற்ற கைதிகளைத் திசைதிருப்பவும் மெக்கெய்னை முன்கூட்டியே விடுதலை செய்ய முன்வந்தன. ஆனால், மெக்கெய்ன் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை எடுத்தார். “எனக்கு முன்னால் சிறைபிடிக்கப்பட்ட மற்ற அமெரிக்க வீரர்கள் விடுதலை செய்யப்படும் வரை, நான் மட்டும் தனியாகச் செல்ல மாட்டேன்” என்று கூறி அந்த விடுதலையை நிராகரித்தார். இதன் விளைவாக, அவர் மேலும் பல ஆண்டுகள் சித்திரவதைகளை அனுபவிக்க வேண்டியிருந்தது.
சுமார் 5.5 ஆண்டுகள் போர்க்கைதியாக (Prisoner of War – POW) இருந்த மெக்கெய்ன் 1973-ல் பாரிஸ் அமைதி உடன்படிக்கைக்குப் பிறகே அவர் விடுதலை ஆகி அமெரிக்கா திரும்பினார். சிறையில் அனுபவித்த சித்திரவதைகளால், அவரது கைகளைத் தலைக்கு மேலே உயர்த்த முடியாத அளவுக்கு நிரந்தர ஊனம் ஏற்பட்டது. மெக்கெய்னை வைத்து அன்று வியட்நாம் பேரங்கள் நடத்தியது போல, இன்று ஈரானும் அந்த வீரரைப் பிடித்து அமெரிக்காவைப் பணிய வைக்கலாம் என்பதாலே டஜன் கணக்கான விமானங்களை அனுப்பி, ஈரானுக்குள்ளேயே புகுந்து 48 மணி நேரத்திற்குள் அந்த வீரரை மீட்டுள்ளார்.
‘மிராக்கிள்’ ஆபரேஷனா? ஈகோவா?
அமெரிக்காவின் அதிரடி மீட்பு நடவடிக்கை என்பது வெறும் ஒரு வீரரை மீட்டெடுத்த நிகழ்வு மட்டுமல்ல; அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையேயான ‘ஈகோ’ யுத்தத்தின் உச்சகட்டமாகவே இது பார்க்கப்படுகிறது. அமெரிக்காவைப் பொறுத்தவரை, ‘எங்கள் வீரரை ஒருபோதும் கைவிட மாட்டோம்’ என்ற தார்மீக வெற்றியாக பார்க்கப்படுகிறது. மறுபுறம், ‘அமெரிக்காவின் நவீன விமானங்களையே எங்களால் வீழ்த்த முடியும்’ என ஈரான் நிரூபித்திருப்பது, வல்லரசு நாடுகளுக்கே ஒரு எச்சரிக்கை மணியாகும். ஒரு வீரரின் மீட்பு அமெரிக்காவிற்கு இந்த ஈஸ்டர் தினத்தில் நிம்மதியைத் தந்திருக்கலாம். ஆனால், இந்த மோதலில் இரு தரப்பிலும் ஏற்பட்டுள்ள விமான இழப்புகளும், நேரடித் தாக்குதல்களும் வளைகுடா பிராந்தியத்தில் அமைதி என்பது இன்னும் எட்டாக்கனியாகவே இருப்பதைக் காட்டுகின்றன.
இந்த ‘மிராக்கிள்’ ஆபரேஷன் உலக ராணுவ வரலாற்றில் ஒரு மைல்கல்லாகப் பேசப்பட்டாலும், இதன் விளைவாகப் போர் இன்னும் தீவிரமடையுமா அல்லது ஒரு உடன்படிக்கைக்கு வழிவகுக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!
இந்த நிலையில் டிரம்பின் லேட்டஸ்ட் பதிவு மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. அதில் ஹோர்முஸ் நீரிணையை திறக்காவிட்டால் செவ்வாய்க்கிழமையன்று ஈரானில் மின் உற்பத்தி நிலையங்களும், மேம்பாலங்களும் தகர்க்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். இதற்கு ஈரானோ, “எங்கள் உள்கட்டமைப்புகள் மீது கைவைத்தால் மிகப்பெரிய பேரழிவை சந்தீப்பீர்கள்” என அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

