சிபு | ஏப்ரல் 6, 2026
சரவாக் மாநிலம் சிபுவில் வார இறுதியில் நடத்தப்பட்ட ஒரு ஒருங்கிணைந்த அதிரடி சோதனையில், சுமார் 1.64 லட்சம் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருட்களைப் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக 25 வயதுடைய இந்தோனேசிய ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று இரவு 11:30 மணியளவில் பாடவான் சாலையில் (Jalan Padawan) சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய அந்த இளைஞரைச் சோதனையிட்டபோது, அவரிடமிருந்து எக்ஸ்டசி (Ecstasy) பொடி மற்றும் கெட்டமின் (Ketamine) போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன என்று, சிபு மாவட்டப் போலீஸ் தலைவர் அசிஸ்டண்ட் கமிஷனர் அஸாரி மிஸ்கோன் தெரிவித்துள்ளார்.
கைதான நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து, கியூ நாங் சந்து (Lorong Kiew Nang) பகுதியில் உள்ள ஒரு வீட்டைப் போலீஸார் முற்றுகையிட்டனர். அங்கு சுமார் 1 கிலோ கெட்டமின், 4.5 கிலோ எக்ஸ்டசி பொடி, 890 எரிமின்-5 மாத்திரைகள் மற்றும் திரவ வடிவிலான போதைப்பொருட்கள் எனப் பெருமளவிலான இருப்பு கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட மொத்த போதைப்பொருட்களின் சந்தை மதிப்பு RM1,64,695 ஆகும். கைதான இளைஞர் மேலதிக விசாரணைக்காக 7 நாட்கள் போலீஸ் காவலில் (Remand) வைக்கப்பட்டுள்ளார். இக்குற்றம் நிரூபிக்கப்பட்டால், போதைப்பொருள் சட்டம் 1952 பிரிவு 39B-இன் கீழ் மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
இந்த ஒருங்கிணைந்த நடவடிக்கையின் போது, சிபுவின் பல்வேறு பகுதிகளில் உள்ள கேளிக்கை விடுதிகள் மற்றும் வணிக வளாகங்களில் மொத்தம் 212 நபர்கள் சோதனையிடப்பட்டனர். இதில் 6 உள்ளூர் ஆண்கள் மெத்தாம்பேட்டமைன் (Methamphetamine) உள்ளிட்ட போதைப்பொருட்களைப் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டு, அவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.




