Last Updated:
157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆடிய லக்னோ அணிக்கு எய்டன் மார்க்ரம் 45 ரன்கள் எடுத்து அதிரடியான தொடக்கத்தை தந்தார்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக ஐதராபாத்தில் நடைபெற்ற இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.
டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. ஹைதராபாத் அணியின் தொடக்கம் மிகவும் மோசமாக இருந்தது. அதிரடி வீரர் அபிஷேக் சர்மா ரன் ஏதும் எடுக்காமல் முகமது ஷமி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
அவரைத் தொடர்ந்து டிராவிஸ் ஹெட் 7 ரன்களிலும், இஷான் கிஷன் ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்ததால் 11 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து அந்த அணி தடுமாறியது. இருப்பினும், ஹென்ரிச் கிளாசன் 62 ரன்களும், நிதிஷ் குமார் ரெட்டி 56 ரன்களும் எடுத்து அணியை சரிவிலிருந்து மீட்டனர்.
இவர்கள் இருவரும் 5-வது விக்கெட்டுக்கு 116 ரன்கள் சேர்த்தனர். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் 9 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்தது. லக்னோ தரப்பில் ஷமி, பிரின்ஸ் யாதவ் மற்றும் அவேஷ் கான் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். குறிப்பாக ஷமி 4 ஓவர்கள் வீசி 9 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார். அவற்றில் 18 டாட் பால்கள் அடங்கும்.
அதைத் தொடர்ந்து 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆடிய லக்னோ அணிக்கு எய்டன் மார்க்ரம் 45 ரன்கள் எடுத்து அதிரடியான தொடக்கத்தை தந்தார். மற்ற வீரர்கள் சுமாராக விளையாடியதால் ஆட்டம் இரு அணிகளின் பக்கமும் சாய்ந்தது.
இருப்பினும், கேப்டன் ரிஷப் பந்த் 50 பந்துகளில் 68 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். லக்னோ அணி 19.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்து த்ரில் வெற்றி பெற்றது. இந்த தோல்வியின் மூலம் சொந்த மண்ணில் ஹைதராபாத் அணி ரசிகர்களை ஏமாற்றினாலும், கிளாசன் மற்றும் நிதிஷ் ரெட்டியின் ஆட்டம் கவனிக்கத்தக்கதாக இருந்தது.
இந்த தொடரில் 2 போட்டிகளில் விளையாடியுள்ள லக்னோ அணி தனது முதல் வெற்றியை இன்று பதிவு செய்துள்ளது.

