ஜெர்தி:
திரெங்கானு மாநிலம், கம்போங் ஓ (Kampung Oh) பகுதியில் இன்று அதிகாலை நிகழ்ந்த பயங்கரத் தீ விபத்தில், 75 வயது மூதாட்டியும் அவரது மகனும் தங்களின் உடலில் 45 விழுக்காடு தீக்காயங்களுடன் உயிர் தப்பினர்.
இச்சம்பவம் தொடர்பாக அதிகாலை 5:14 மணியளவில் ஜெர்தி தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் கிடைத்தது. எட்டுப் பணியாளர்கள் அடங்கிய குழுவினர் விரைந்து வந்து தீயைக் கட்டுப்படுத்தினர்.
தீ விபத்தில் அந்த வீடு சுமார் 80 விழுக்காடு முற்றிலும் எரிந்து சாம்பலானது.
காயமடைந்தவர்கள் பவுசியா அலி (75) மற்றும் அவரது மகன் அஸ்லி அபு (45) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் இருவரும் சிகிச்சைக்காக பெசுட் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
பாதிக்கப்பட்டவர்களின் அண்டை வீட்டார் முஹமட் ரஃபைன் ருஸ்லான் (30) என்பவர் கூறுகையில்,
“ அதிகாலை 5 மணியளவில் அஸ்லி உதவி கேட்டு அலறுவதைக் கேட்டு ஓடி வந்தேன். வீட்டின் கதவு பூட்டப்பட்டிருந்ததால், அதை உதைத்துத் திறந்து உள்ளே சென்றேன். ஒரு அறையில் படுக்கை விரிப்பில் பற்றிய தீ வேகமாகப் பரவிக் கொண்டிருந்தது. அஸ்லி தீயை அணைக்கப் போராடிக்கொண்டிருந்தார். நான் பவுசியாவைத் தூக்கிக்கொண்டு வெளியே ஓடி வந்தேன். அஸ்லி தானாகவே வெளியே வந்து தப்பினார்.”
தீயணைப்பு நிலையத் தலைவர் முஸ்தபா இஸ்மாயில் கூறுகையில், தீயை அணைக்கும் பணி காலை 7:28 மணியளவில் முழுமையாக நிறைவடைந்தது. தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் மற்றும் சேத மதிப்பு குறித்து அதிகாரிகள் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.




