பெக்கான் | ஏப்ரல் 3, 2026
மலேசியாவில் மேம்பாட்டுப் பணிகளுக்காக ஒதுக்கப்பட்டும், பராமரிப்பு இன்றியும் சுமார் 20,000 ஹெக்டருக்கும் அதிகமான அரிசி விளைநிலங்கள் கைவிடப்பட்ட நிலையில் உள்ளதாக விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் சாபு தெரிவித்துள்ளார்.
வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 3) பஹாங் மாநிலத்தின் பஹாங் துவா பகுதியில் கைவிடப்பட்ட நிலங்களைப் பார்வையிட்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் குறிப்பிட்டதாவது:
பல விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்கள் விவசாயத்தைத் தொடர ஆர்வமில்லாமல், வேலைவாய்ப்பு தேடி நகரங்களுக்கு இடம்பெயர்ந்துவிட்டனர். ஆரம்பத்தில் வீடமைப்பு அல்லது இதர வணிக மேம்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட சில விளைநிலங்கள், பின்னர் பாதியிலேயே கைவிடப்பட்டு தரிசு நிலங்களாக மாறியுள்ளன. நில உரிமையாளர்களாக உள்ள முதியோர்களால் உடல்நலக் குறைவு காரணமாகத் தொடர்ந்து விவசாயம் செய்ய முடியாத நிலையும் ஒரு காரணமாகும்.
இந்தத் தரிசு நிலங்களை மீண்டும் விளைநிலங்களாக மாற்ற அரசாங்க அமைப்புகளுடன் இணைந்து செயல்படத் தனியார் நிறுவனங்களுக்கு அமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார்.
தனியார் நிறுவனங்கள் நில உரிமையாளர்களுடன் முறையாக வாடகை ஒப்பந்தம் செய்துகொண்டு, நவீன தொழில்நுட்பத்துடன் அங்கு மீண்டும் நெல் பயிரிடலாம். இது நில உரிமையாளர்களுக்கு வருமானத்தையும், நாட்டுக்கு உணவுப் பாதுகாப்பையும் வழங்கும். பஹாங் மாநிலத்தில் கைவிடப்பட்ட நிலங்களை மேம்படுத்த பிஎல்எஸ் குழுமம் முன்வந்துள்ளது. பஹாங் துவா பகுதியில் உள்ள 200 ஹெக்டர் நிலத்தை மீட்கும் இத்திட்டத்தில், இதுவரை 548 விவசாயிகளில் 100 பேர் இணைந்துள்ளனர்.
விளைநிலங்கள் தரிசு நிலங்களாகப் போவதைத் தடுக்கவும், நாட்டின் அரிசி உற்பத்தித் திறனை அதிகரிக்கவும் இத்தகைய கூட்டுறவு முயற்சிகள் அவசியம் என்று அமைச்சர் வலியுறுத்தினார். இதன் மூலம் முதியோர்கள் தங்கள் நிலங்களை இழக்காமல் வருமானம் ஈட்டவும் வழிவகை செய்யப்படும்.




