Last Updated:
210 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பஞ்சாப் கிங்ஸ் அணி களம் இறங்கியது
சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
ஐபிஎல் தொடரில் 2 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி 2 போட்டிகளிலும் தோல்வியடைந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் 2026 தொடரின் 7-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடின. இந்தப் போட்டியில், டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதன்படி களமிறங்கிய சிஎஸ்கே அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் எடுத்தது.
ஆரம்பத்தில் அதிரடி வீரர் சஞ்சு சாம்சன் 7 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தாலும், அதன்பின்னர் இளம் வீரர் ஆயுஷ் மாத்ரே மற்றும் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் ஜோடி அபாரமாக விளையாடியது. குறிப்பாக ஆயுஷ் மாத்ரே வெறும் 43 பந்துகளில் 73 ரன்கள் விளாசினார். கேப்டன் ருதுராஜ் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சிவம் துபே 45 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து 210 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பஞ்சாப் கிங்ஸ் அணி களம் இறங்கியது. தொடக்க வீரர் பிரியான்ஷ் ஆர்யா வெறும் 11 பந்துகளில் 39 ரன்கள் விளாசி அதிரடியான அடித்தளம் அமைத்துக் கொடுத்தார்.
பின்னர் வந்த கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பொறுப்புடன் விளையாடி 29 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றார். பிரப்சிம்ரன் சிங் 43 ரன்களும், கூப்பர் கான்னோலி 36 ரன்களும் எடுத்து பலம் சேர்த்தனர். 18.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்த பஞ்சாப் அணி 210 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
Apr 03, 2026 11:50 PM IST


