Last Updated:
“சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளதால் எரிபொருளின் விலையை உயர்த்த வேண்டி உள்ளது” என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக கச்சா எண்ணெய் கப்பல்கள் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் சர்வதேச சந்தைக்கு கச்சா எண்ணெய் வரத்து குறைந்து வருகிறது. இதனால் அதன் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
அந்த வகையில் பாகிஸ்தானில் கடந்த 30 நாட்களில் இரண்டு முறை, பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளது. குறிப்பாக பாகிஸ்தானில் எரிபொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து வரும் நிலையில், டீசல் விலை தற்போது 55 சதவிகிதம் அதிகரித்துள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோல் 458 ரூபாய்க்கும், டீசல் 520 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இது தொடர்பாக நேற்று (ஏப்ரல் 2) செய்தியாளர்களை சந்தித்த பாகிஸ்தான் பெட்ரோலிய துறை அமைச்சர் அலி பெர்வைஸ் மாலிக் (Ali Pervaiz Malik), “சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளதால் எரிபொருளின் விலையை உயர்த்த வேண்டி உள்ளது” எனக் கூறினார்.
இந்த நிலையில் பெட்ரோல், டீசலின் புதிய விலையேற்றம் வெள்ளிக்கிழமை (இன்று) முதல் அமலுக்கு வந்தது. அதன்படி, பாகிஸ்தானில் டீசல் விலை 55 சதவிகிதம் உயர்த்தப்பட்டு, தற்போது 520 ரூபாய் 35 காசுகளுக்கும், பெட்ரோல் விலை 42 சதவிகிதம் உயர்ந்து, ஒரு லிட்டர் 458 ரூபாய் 41 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதாவது, பெட்ரோல் லிட்டருக்கு 137 ரூபாயும், டீசல் லிட்டருக்கு 185 ரூபாயும் உயர்ந்துள்ளது.
விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை… போரால் கடும் அவதியில் பாகிஸ்தான்!


