மலேசிய வேலைவாய்ப்பு வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக, ‘கிக் பணியாளர்கள் சட்டம் 2025’ (Akta Pekerja Gig 2025) அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்துள்ளது. இதனை வலுப்படுத்தும் வகையில், கிக் பணியாளர்கள் தீர்ப்பாயம் (TPG), கிக் ஆலோசனை மன்றம் (MPGig) ஆகியவையும் நிறுவப்பட்டுள்ளன.
கோலாலம்பூரில் உள்ள விண்டாம் கிராண்ட் பாங்சார் ஹோட்டலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ இரமணன் ராமகிருஷ்ணன் இந்த புதிய அமைப்புகளுக்கான நியமனக் கடிதங்களை வழங்கினார். இதுகுறித்து பேசிய இரமணன், கடந்த மார்ச் 31, 2026 முதல் அமலுக்கு வந்துள்ள இந்த சட்டத்தின் மூலம், நாடு முழுவதும் உள்ள 1.64 மில்லியனுக்கும் அதிகமான கிக் பணியாளர்கள் சட்டப்பூர்வ பாதுகாப்பைப் பெறுவார்கள் எனத் தெரிவித்தார்.
கிக் பணியாளர்கள், நிறுவனங்களுக்கு இடையிலான ஒப்பந்தப் பிணக்குகளை விரைவாகவும், குறைந்த செலவிலும் தீர்த்து வைக்க ‘கிக் பணியாளர்கள் தீர்ப்பாயம்’ (TPG) ஒரு தளமாகச் செயல்படும். இந்தத் தீர்ப்பாயத்திற்குப் பிணக்குகளை விசாரித்துத் தீர்ப்பு வழங்கும் அதிகாரம் உண்டு எனவும் அவர் குறிப்பிட்டார். இந்நிலையில், அரசு, கிக் பணியாளர்கள், நிறுவனப் பிரதிநிதிகளை உள்ளடக்கிய ‘கிக் ஆலோசனை மன்றம்’ (MPGig) அமைக்கப்பட்டுள்ளது. இது குறைந்தபட்ச வருமான விகிதம், கட்டண முறைகள், தொழில் தரநிலைகள் குறித்து அரசுக்கு ஆலோசனைகளை வழங்கும்.
இந்தத் தீர்ப்பாயத்தின் தொடக்கக்காலப் பணிகளை முன்னெடுக்க 22 தொழில் நீதிமன்றத் தலைவர்கள், 28 தொழில் உறவு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் எனவும் இரமணன் குறிப்பிட்டார். இன்று நடைபெற்ற கிக் ஆலோசனை மன்றத்தின் முதல் கூட்டத்தில், “மலேசியாவில் கிக் பணியாளர்களுக்கான நியாயமான இழப்பீட்டு அமைப்பு” என்ற தலைப்பிலான ஆய்வு குறித்து விவாதிக்கப்பட்டது.
முதற்கட்டமாக பிளாட்பார்ம் (Platform) வழியாகப் பணிபுரியும் ஊழியர்களுக்கும், அடுத்த கட்டமாக மற்ற ஒப்பந்த நிறுவனங்களுக்கும் இந்த ஆய்வு விரிவுபடுத்தப்படும். அத்துடன் இந்த புதிய சட்டம், கிக் பொருளாதாரத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் நலனைப் பாதுகாப்பதோடு, ஒரு நிலையான வணிகச் சூழலை உருவாக்கும் எனவும் அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.
ராமேஸ்வரி ராஜா






