Last Updated:
மத்தியப் பிரதேசம் கல்யாண்பூர் மாவட்டத்தில் உள்ள வீட்டில் கொள்ளையடிக்க வந்த நபர்கள் தலைதெறிக்க ஓடிய விநோத சம்பவம் நடந்துள்ளது. பின்னணி என்ன…?
மத்தியப் பிரதேசத்தில் கொள்ளையடிக்க வந்த திருடர்கள் விரட்டி அடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள வீட்டில் கைவரிசை காட்ட வந்தவர்கள் தலைதெறிக்க ஓடியது ஏன்? நடந்தது என்ன?
மத்தியப் பிரதேசம் கல்யாண்பூர் மாவட்டத்தில் ராணியதேஷ்புரா கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக ஒரு வீடு உள்ளது. காலை நேரத்தில் அந்த வீட்டிற்கு வெளியே சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது, நான்கைந்து பேர் முகமூடி அணிந்தபடி வந்துள்ளனர்.
அவர்களின் கைகளில் துப்பாக்கி மற்றும் தடிகள் இருந்ததைக் கண்டு சிறுவர்கள் அச்சத்தில் வீட்டிற்குள் ஓடியுள்ளனர். அவர்களை விரட்டியபடி முகமூடிக் கொள்ளையர்கள் இருவர் வீட்டிற்குள் சென்றுள்ளனர். அடுத்த கணமே உள்ளே சென்ற கொள்ளையர்கள் தலைதெறிக்க வெளியே ஓடி வந்துள்ளனர். வீட்டில் ஒன்றிரண்டு ஆட்கள் இருப்பார்கள். அவர்களை மிரட்டி பணிய வைத்துவிடலாம் என்று நினைத்து நுழைந்துள்ளனர்.
ஆனால், அதிக எண்ணிக்கையிலான உறுப்பினர்களைக் கொண்ட மெகா குடும்பம் என்பதை அறிந்ததும், சென்ற வேகத்தில் கொள்ளையர்கள் திரும்பியுள்ளனர். வந்தது கொள்ளையர்கள் என்பதை அறிந்து வீட்டில் இருந்த இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் சுதாரித்துக் கொண்டு கையில் கிடைத்தப் பொருட்களை எடுத்து துரத்தியுள்ளனர். வெளியே நின்றிருந்த கொள்ளையர்களும் ஆபத்தை உணர்ந்து, உயிர் பிழைத்தால் போதும் என்ற நினைப்பில் தலைதெறிக்க ஓடியுள்ளனர். குடும்ப உறுப்பினர்களுடன், ஊர் மக்களும் சேர்ந்து கொண்டதால் முகமூடிக் கொள்ளையர்கள் சிட்டாய் பறந்து மறைந்துள்ளனர்.


