Last Updated:
மருத்துவ அவசரநிலை ஏற்படுவதாக மூளைச் சலவை செய்து ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்று பணப்பறிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
நேபாளத்தில் இமயமலைக்கு மலையேற்றத்துக்கு வரும் சுற்றுலா பயணிகளை குறிவைத்து சுற்றுலா வழிகாட்டிகள், மருத்துவமனைகள், ஹெலிகாப்டர் சேவை வழங்கும் நிறுவனங்கள் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
எவரெஸ்ட், அன்னபூர்னா, லாங்டாங் மற்றும் மனசுலு பகுதிகளுக்கு டிரக்கிங் வரும் சுற்றுலா பயணிகள் தங்களை வழிநடத்த சுற்றுலா ஏஜென்சிகள் மூலம் வழிகாட்டிகளை நியமிக்கின்றனர். இந்த வழிகாட்டிகள் சுற்றுலா பயணிகள் குடிக்கும் தேநீர் அல்லது குளிர்பானங்களில் பேக்கிங் சோடாவை கலந்து கொடுப்பதாக கூறப்படுகிறது.
இமயமலை
இதனால் மலையேறும் போது சுற்றுலா பயணிகளுக்கு கடும் வயிற்று வலி, நீரிழப்பு, வாந்தி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட உபாதைகள் ஏற்படுகின்றன. இந்த சூழலை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் வழிகாட்டிகள், சுற்றுலா பயணிகளுக்கு மருத்துவ அவசரநிலை ஏற்படுவதாக மூளைச் சலவை செய்து ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்று பணப்பறிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், ஒரே ஹெலிகாப்டரில் ஒன்றுக்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்றுவிட்டு போலி மருத்துவ ஆவணங்கள், போக்குவரத்து ஆவணங்களை தயாரித்து காப்பீட்டு நிறுவனங்களிடம் இருந்து 160 கோடி ரூபாய் வரை மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டு சுற்றுலா பயணி ஒருவர் அளித்த புகாரைத் தொடர்ந்து, விசாரணை நடத்திய அதிகாரிகள் சுற்றுலா நிறுவனங்கள், ஹெலிகாப்டர் சேவை நிறுவனங்கள், தனியார் மருத்துவமனைகள் கூட்டாக இணைந்து 60-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகளிடம் மோசடியில் ஈடுபட்டதை கண்டறிந்தனர்.


