Last Updated:
ஒரு கட்டத்தில் 26 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து டெல்லி அணி தடுமாறியது. ஆனால், அதன் பிறகு இணைந்த சமீர் ரிஸ்வி மற்றும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஜோடி ஆட்டத்தின் போக்கை மாற்றியது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் லக்னோ அணிக்கு எதிராக இன்று நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
லக்னோவின் ஏகானா மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் அக்சர் படேல் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். முதலில் களம் இறங்கிய லக்னோ அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது.
கேப்டன் ரிஷப் பண்ட் 7 ரன்களில் ரன் அவுட் ஆகி வெளியேறினார். மிட்செல் மார்ஷ் 35 ரன்களும், அப்துல் சமது 36 ரன்களும் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். எனினும், டெல்லி அணியின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் லக்னோ அணி 18.4 ஓவர்களில் 141 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
டெல்லி தரப்பில் நடராஜன் மற்றும் லுங்கி என்கிடி தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர். குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
142 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி ஆடிய டெல்லி அணிக்கும் தொடக்கம் சரியாக அமையவில்லை. அதிரடி வீரர் கே.எல்.ராகுல் ரன் ஏதுமின்றி முகமது ஷமி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். நிதிஷ் ராணா 15 ரன்களும், நிசங்கா 1 ரன்னும் எடுத்து வெளியேறினர்.
ஒரு கட்டத்தில் 26 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து டெல்லி அணி தடுமாறியது. ஆனால், அதன் பிறகு இணைந்த சமீர் ரிஸ்வி மற்றும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஜோடி ஆட்டத்தின் போக்கை மாற்றியது. சமீர் ரிஸ்வி அதிரடியாக விளையாடி 47 பந்துகளில் 70 ரன்கள் (4 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள்) குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
அவருக்குப் பக்கபலமாக ஆடிய ஸ்டப்ஸ் 39 ரன்கள் எடுத்தார். இந்த ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 119 ரன்கள் சேர்த்து, 17.1 ஓவர்களிலேயே டெல்லி அணியை வெற்றி பெறச் செய்தது. லக்னோ தரப்பில் பிரின்ஸ் யாதவ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
Apr 01, 2026 11:21 PM IST

