கோலா சிலாங்கூர் | ஏப்ரல் 1, 2026:
சிலாங்கூர் மாநிலம், சுங்கை பெசார் அருகே உள்ள சுங்கை பாஞ்சாங் பகுதியில் இன்று மதியம் நிகழ்ந்த கார் விபத்தில் 30 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் உயிரிழந்தார். அவருடன் பயணித்த ஒரு பெண்ணும் சிறுமியும் காயமடைந்துள்ளனர்.
இன்று மதியம் 1:25 மணியளவில் இந்த விபத்து குறித்துத் தீயணைப்புத் துறைக்குத் தகவல் கிடைத்துள்ளது என்று, சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் உதவி இயக்குநர் அகமட் முக்லிஸ் முக்தார் கூறினார்.
பாதிக்கப்பட்டவர்கள் பயணித்த ‘புரோட்டான் சாகா’ (Proton Saga) கார், கம்போங் பெலியா 2 (Kampung Belia 2) பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து சாலைத் தடுப்பில் மோதி கவிழ்ந்தது.


சம்பவ இடத்திற்குச் சுங்கை பெசார் தீயணைப்பு நிலையத்திலிருந்து 7 வீரர்கள் அடங்கிய மீட்புக் குழுவினர் விரைந்தனர் என்றும், காரை ஓட்டிச் சென்ற 30 வயது மதிக்கத்தக்க மலேசிய நபர் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டார். சம்பவ இடத்திற்கு வந்த சுகாதார அமைச்சக அதிகாரிகள் அவர் உயிரிழந்ததை உறுதிப்படுத்தினர். அவரது உடல் மாலை 3:03 மணியளவில் மீட்கப்பட்டுப் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
காரில் பயணித்த 30 வயது மதிக்கத்தக்கப் பெண்ணிற்குப் பலத்த காயங்களும், ஒரு சிறுமிக்கு லேசான காயங்களும் ஏற்பட்டுள்ளன. தீயணைப்புப் படையினர் வருவதற்கு முன்பே பொதுமக்கள் அவர்களை மீட்டுள்ளனர்.
காயமடைந்த இருவரும் மேலதிக சிகிச்சைக்காகச் சுகாதார அமைச்சக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். விபத்து நடந்த இடத்தில் போக்குவரத்துச் சீர்செய்யப்பட்டு, போலீசார் இது குறித்துத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்று அவர் சொன்னார்.




