Last Updated:
Watermelon Sales| புதுக்கோட்டையில் தர்பூசணி விற்பனை ஜோர் நடைபெற்றறு வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், தர்பூசணி விற்பனை அதிகரித்து வருகிறது. வெப்பநிலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதால், உடலை குளிர்விக்க உதவும் நீர்ச்சத்து மிகுந்த பழங்களான தர்பூசணி, முலாம்பழம் போன்றவற்றிற்கு பொதுமக்கள் மத்தியில் அதிகமான வரவேற்பு உருவாகியுள்ளது. இதன் காரணமாக சந்தைகள் மற்றும் சாலையோரங்களில் இப்பழங்களின் விற்பனை ஜோராக நடைபெற்று வருகிறது.
புதுக்கோட்டையில் சாலையோரத்தில் பழக்கடை நடத்தி வரும் வியாபாரி முகமது இப்ராஹிம் கூறுகையில், “கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக சீசன் பழங்கள் விற்பனை செய்து வருகிறோம். இந்த ஆண்டு மாவட்டத்தில் தர்பூசணி சாகுபடி குறைவாக இருப்பதால், உள்ளூர் வரத்து மிகவும் குறைந்துள்ளது. இதனால், திண்டிவனம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பழங்களை கொண்டு வந்து விற்பனை செய்து வருகிறோம்” என்றார்.
மேலும், வரத்து குறைவு காரணமாக தர்பூசணி விலை உயர்ந்துள்ளதாகவும், தற்போது ஒரு கிலோ ரூ.25க்கு விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிவித்தார். அதே நேரத்தில், மாணவர்களை கருத்தில் கொண்டு ஒரு பிளேட் ரூ.10 என்ற குறைந்த விலையில் வழங்கி வருவதாகவும் கூறினார்.
மேலும், பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு காரணமாக போக்குவரத்து செலவுகள் அதிகரித்துள்ளதால், பழங்களை கொண்டு வருவது சற்று சிரமமாக இருப்பதாகவும், இருப்பினும் மக்களின் தேவை அதிகரித்து வருவதால் வியாபாரம் தொடர்ந்தும் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.
Apr 01, 2026 12:03 PM IST

